பக்கம்:வெளிச்சத்தை நோக்கி.pdf/112

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

110 வெளிச்சத்தை நோக்கி...


தவிக்கும் மனதைத் தண்டிக்க நினைத்தவன் போல், ஒரு சிகரெட்டை எடுத்தான். அதைப் பற்றவைத்து, ஒரு தடவை உறிஞ்சிவிட்டு, பிறகு நுனி சிவந்த சிகரெட்டை எடுத்து, நெஞ்சில் வைத்து அழுத்தினான். இன்னொரு சிகரெட்டைப் பற்ற வைத்து, நெற்றியில் அணைத்தான். இப்படி ஏழெட்டு சிகரெட்டுக்களை எடுத்து, வயிற்றில், தலையில், இடுப்பில், காலில் என்று பல்வேறு இடங்களில் சுட்டுக் கொண்டான். சுட்ட இடங்கள் தீப்பிடித்தவைபோல், புகை கக்கின. மொத்தமாக, வந்த வலியைப் பல்லைக் கடித்துக் கொண்டே "ஏய் பிசாசு மனமே... இன்னுமா... ஒனக்கு அந்த நெனப்பு போகலே... இருக்கட்டும்... ஒன்னையே... என்னிடமிருந்து போக வைக்கேன் பாரு..." என்று தானாய் புலம்பிக்கொண்டு, இன்னொரு சிகரெட்டை எடுத்து பற்ற வைக்கப் போனான். வெளியே கதவு தட்டும் ஓசை கேட்டது

மெய்யப்பன், கதவைத் திறந்தான். யாரையும் காணவில்லை. ஒருவேளை, அதுவும் பிரமையாக இருக்குமோ என்று ஒரு எண்ணம். வரசலில் நின்றபடியே, சுட்ட இடங்களை அழுத்திவிட்டுக் கொண்டிருந்தான். ஜன்னல் வழியாக, அவன் தன்னைச் சுட்டுக் கொள்வதைப் பார்த்த சத்யா இருமிப் பார்த்தாள். அது பயன்படாமல் போகவே, கதவைத் தட்டினாள். கதவு திறக்கப்பட்டதும், அவன் கண்ணுக்குத் தெரிந்த ஒரு தூணில் முகம் புதைத்து நின்றாள். தூணில் முகத்தைத் தேய்த்து, கண்களையும் துடைத்துக் கொண்டாள். மெய்யப்பனுக்கு ஒன்றும் புரியவில்லை. ஒருவேளை, அவளே கதவைத் தட்டியிருப்பாளோ... வேறு யாராவது வந்திருப்பார்களோ... அல்லது வெறும் பிரமையோ... அப்படிப் பிரமையாக இருந்தால் நல்லது... பைத்தியம் முற்றுகிறது என்று அர்த்தம்... ரொம்ப ரொம்ப நல்லது.

மெய்யப்பன், தன் சந்தேகத்தைப் போக்கிக் கொள்வதற்காக, அவளை மெல்ல நோக்கி "யாராவது. இங்கே வந்து கதவைத் தட்டினாங்களா... இப்போல்லாம்