பக்கம்:வெளிச்சத்தை நோக்கி.pdf/114

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

112 வெளிச்சத்தை நோக்கி...


கேட்கலாமா... வாணியிடம் கேட்கலாமா... கூடாது... கூடாது... அன்பளிப்பைப் திருப்பிக் கேட்பது அற்பத்திலும் அற்பம்...'

பசியெடுத்த வயிற்றை நீரால் நிரப்பிக்கொண்டு, மெய்யப்பன் படுத்தான். கட்டிலிலேயே படுத்தான். அது பாடைபோல் தெரிந்தாலும், பாடையாகவே இருக்கட்டும் என்பது போல் கூரை இடிந்து விழுவது போல் தோன்றினாலும், இடியட்டும் என்பதுபோல் இரு கால்களையும் வயிற்றுடன் சேர்த்துக் குறுக்கி, முன் தலையை முட்டிக் கால்களில் ஊன்றி, சுருண்டு படுத்தான்.எவ்வளவு நேரம் ஆனதோ தெரியவில்லை... திடீரென்று சத்தம்... சத்யாவின் குரல்...

"நான் சூதுவாதோடபார்க்கலண்ணா... நல்ல மனுஷன்... இப்டி ஆயிட்டாரேன்னுதான் பார்த்தேண்ணா... மற்றபடி தப்பாய் பார்க்கலண்ணா... சத்யமாய் பார்க்கல... அய்யோ என் கழுத்து, அய்யோ என் இடுப்பு... அய்யோ அம்மா... அண்ணா... கடவுளே... கடவுளே..."

மெய்யப்பன் எழுந்திருக்கப் போனான். உடல் சோர்வும் உள்ளச் சோர்வும் அவனை கீழே அழுத்திப் போட்டன. சத்யாவின் ஓலத்தை மீறி, அண்ணிக்காரியின் சத்தம் கேட்டது. பிறகு எல்லாம் அடங்கி, படிப்படியாய் அடங்கி, முற்றிலும் அடங்கிவிட்டது. தூக்கம் அடக்கிவிட்டது.

மெய்யப்பனும் கண்களை மூடினான். கனவா... பிரமையா... ஒன்றும் தெரியவில்லை. சத்யாவின் தலையை அண்ணிக்காரி அசையாதபடிப் பிடித்துக் கொள்கிறாள். அண்ணன், அவள் கழுத்தைக் கடித்து, ரத்தத்தைக் குடிக்கிறான். குடித்து முடித்த திருப்தியில், உதட்டோரம் குவிந்த ரத்தத் துளிகளை நாக்கால் சுவைத்து சுத்தமாக்குகிறான். சத்யா, துடிக்கிறாள். பிறகு, அண்ணன், மீண்டும், கழுத்தில் கடிபடாத இடத்தைக் கடிப்பதற்காகக் குனிகிறான்.