பக்கம்:வெளிச்சத்தை நோக்கி.pdf/116

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

114 வெளிச்சத்தை நோக்கி...


இளக்காரம்" என்று மனைவி பின்பாட்டுப் பாடியபடி முன் நடந்தாள். சத்யா, அவர்கள் வருவதைப் பார்த்ததும், ஒரு மூலையில் சாய்ந்தாள்.

சத்யாவின் அண்ணன் தள்ளிய வேகத்தில் அறைக்குள் மல்லாந்து விழுந்த மெய்யப்பன், கட்டில் சட்டத்தில் பட்ட உச்சந்தலை வலித்ததால், கைகளால் அதைத் தடவினான். கைகளில் ஈரக்கசிவை உணர்ந்து, எழ முடியாமல் எழுந்து, விளக்கைப் போட்டுவிட்டு, கைகளைப் பார்த்தான். ரத்தம் துளிகளாக அல்ல. கட்டி கட்டியாக மெய்யப்பன் இரண்டு கைகளையும் சேர்த்தாற்போல் வைத்து, உள்ளங் கைகளைப் பார்த்தான். ரத்தத்தைப் பார்க்கப் பார்க்க, சிரிப்பு வந்தது. முதுகு வழியாக ஓடிய ரத்தத்தையும் கையால் தடவி, முதுகு முழுவதும் தேய்த்து விட்டுக்கொண்டே சிரித்தான்... பயங்கரமாகச் சிரித்தான்.

இவன் சிரிக்கச் சிரிக்க, சத்யா ஒலமிட்டுக் கொண்டிருந்தாள். அவளுக்கும் இப்போது ரத்தம் வருகிறதோ என்னவோ!...

(15)

இனிமேல் எழ வேண்டியதில்லை என்பதுபோல் மெய்யப்பன் முடங்கிக் கிடந்தான். நேற்றிரவு, சத்தியாவின் அண்ணன் அவன் தலைமுடியைப் பற்றி இழுத்ததும், தாறுமாறாகப் பேசியதும், ஒரு பிரமையாக இருக்க வேண்டும் என்று நினைத்தபடியே, புரண்டு படுத்தான். பிரமையல்ல… வெளியே அண்ணிக்காரி இன்னும் கத்திக் கொண்டிருப்பது காதில் உறைத்தது.