பக்கம்:வெளிச்சத்தை நோக்கி.pdf/118

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

116 வெளிச்சத்தை நோக்கி...


ரகளைக்கு சத்யா பலியாக வேண்டாம். எங்கேயாவது ஓடிப் போயிடலாம்... எனக்கு நிம்மதியோ... இல்லையோ... எல்லோருக்கும் நிம்மதி.

மெய்யப்பன், தான் வசித்த அறையை நோட்டமிட்டுக் கொண்டான். எதையாவது எடுத்துக் கொள்ளலாமா என்று யோசித்தான். பிறகு, அந்த பீடை பிடித்த அறையில் உள்ள எதுவுமே வேண்டாம் என்பதுபோல்... கதவைத் திறக்கப் போனான்.

திடீரென்று போலீஸ்பயத்தால்,தன்மானத்தின் சாவால், சலனமில்லாததுபோல் இருந்த அவன் மனக் குட்டையில் விலாவில், ஒரு எருமை மாடு முட்டுவது போலிருந்து. சத்யாவின் கழுத்தை, அண்ணன் கடிக்கிறான். ரத்தம் பீறிடுகிறது. பீறிட்ட ரத்தம், அவன் சட்டையில் சிதறுகின்றது... காட்டுக்கு ஓடிப்போகிற அவனை... ஓநாய்கள் வளைத்துக் கொள்கின்றன. அவனைத் துண்டு துண்டாகக் கடிக்கின்றன. கூரை விழுகிறது... காலூன்றிய தரை பாதாளத்திற்குள் பாய்கிறது... கை கால்கள் துண்டித்து தனித் தனியாய் விழுகின்றன.

திடீரென்று, இன்னொரு எண்ணம் விமலா அவனைப் பார்க்கிறாள். கண் கலங்க, உதடுகள் துடிக்க,வாய் விம்ம... அவன் தலையை ஆதரவாகப் பிடித்துக் கொள்கிறாள். கண்ணீரைத் துடைக்கிறாள். கழுத்தைக் கட்டி அழுகிறாள். "அய்யோ... ஒங்களுக்கா... இந்த கதி... இந்த கதி..." என்று ஓலமிடுகிறாள்.

மெய்யப்பன், மழையில் நனைந்த ஆடுபோல், கழுத்தை உதறிக் கொண்டான். 'மூடமனமே... மானங்கெட்ட நெஞ்சமே... இன்னுமா ஒனக்கு அந்த நெஞ்சமற்றவள் மேல் ஆசை... அதுவும்... பேராசை... பெரும் நஷ்டம்... ஒன்னை மானபங்கப்படுத்தப் போகிறேன் பார்... நான்... போலீசில் உதைபட்டு, நாய்போல இழுத்துக்கொண்டு போகப்படும் போது, நீ படும் அவஸ்தையை ரசிக்கப் போகிறேன் பார்..."