பக்கம்:வெளிச்சத்தை நோக்கி.pdf/119

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சு.சமுத்திரம் 117


மெய்யப்பன், தான்வேறு, மனம் வேறு என்று பிரிந்துணர்ந்தவன்போல், கட்டிலில் படுத்துக் கொண்டான். துப்பட்டியை எடுத்து, தலை முழுவதையும் மூடிக் கொண்டு, வெளியுலகைப் பார்க்க விரும்பாதவன்போல் படுத்துக் கொண்டான். உடம்பு கட்டையானது. உள்ளம் ஓய்வு பெற்றது.

திடீரென்று, ஒரு கனவு அல்லது பிரமை, மெஸ்காரர் வந்து, அவன் கடிகாரத்தைக் கழற்றப் பார்க்கிறார். அவன் திமிறுகிறான். கடைசியில், அவனுடைய முன் கையை வெட்டி, கடிகாரத்தோடு கொண்டு போகிறார். திடுக்கிட்டு விழித்த மெய்யப்பன், மேஜையில் இருந்த கைக்கடிகாரத்தைப் பார்த்தான். மணி பகல் பதினொன்று. அன்று, மாதக் கடைசி என்பதும், சம்பள நாள் என்பதும் நினைவுக்கு வருகிறது. சம்பளத்தை வாங்கி, 'மெஸ்'கடனைத் தீர்க்கலாம். செத்த பிறகு, யாரும் ஈமக்கடன் செய்வார்களோ இல்லையோ... என் கடனைப் போக்கி விட்டுப் போகலாம்.

பறட்டைத் தலையுடன், மோவாயை மறைத்த தாடியுடன், முகம் மறைந்த மீசையுடன், கசங்கிய பேண்டோடு, புறப்பட்டான். பல் விளக்கவில்லையே என்பது நினைவுக்கு வரவில்லை. வயிறு என்று ஒன்று இருப்பதும் மறந்து போய்விட்டது.

வெளியே வந்தவன், தெருமுனையில் இரண்டு போலீஸ்காரர்கள் இருப்பதைப் பார்த்துவிட்டு, பின் வாங்கப் பார்க்கிறான். அவர்கள் யதேச்சையாகப் பார்த்தபோது,உடம்பு ஆடியது... மெள்ள மெள்ள முன்னேறுகிறான்... அவர்கள் அவனைப் பார்ப்பதாகத் தெரியவில்லை... ஒருவேளை 'டக்'கென்று பிடிக்கப் போகிறார்களோ... பிடித்தாலும் நல்லதுதான்... அவர்களே... ஆஸ்பத்திரியில் சேர்த்து விடுவார்கள். விமலா வந்து... ஆஸ்பத்திரியில் பார்ப்பாளா... சீ... என்ன மனுஷன் நான்... அடேய்... மெய்யப்பா... இன்னும் உன்னை மனுஷன்னு நினைக்கிறியா...