பக்கம்:வெளிச்சத்தை நோக்கி.pdf/120

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

118 வெளிச்சத்தை நோக்கி...

மெய்யப்பன்,விறைப்போடு நடந்தான். போலீஸ்காரர்கள், பிணத்துக்குக் காவல் இருப்பதுபோல், அந்தப் பக்கம் வரப்போகும் ஒரு தலைவரின் வருகைக்காகக் காத்துக் கிடக்கிறார்கள் என்பது புரியாமல், அவன் பாட்டுக்கு நடந்தான். யாரோ ஒருவரின் குடைக்கம்பி பட்டபோது, லத்திக் கம்போ என்று, மாடு போலத் துள்ளிக் குதித்தான். நல்லவேளை... போலீஸ் இல்லை. மேற்கொண்டும் கஷ்டம் வராததை இன்பமாக நினைத்துச் சிரித்துக் கொண்டான்.

அவன் அலுவலகம் வந்தபோது, உள்ளேயிருந்து, சத்யாவின் அண்ணன் வெளியே வந்தான். மெய்யப்பனைப் பார்த்து முறைத்துக் கொண்டான். பிறகு, ரத்தச் சிவப்பேறிய கண்களை உருட்டியடி, தலையை மேலுங்கீழுமாக ஆட்டிக் கொண்டு அகன்றான்.

மெய்யப்பன் அலுவலகத்திற்குள் நுழைந்தபோது, அங்கிருந்த அத்தனை சகாக்களும் அவனைக் குழப்பத்தோடு பார்த்தார்கள். விமலா, கனகத்தைப் பார்த்துக் கண்ணடித்துக் கொண்டாள். தோள்களைக் குலுக்கிக் கொண்டாள். உதட்டைப் பிதுக்கிக் கொண்டாள்.

மெய்யப்பன்,இருக்கையில் உட்கார்ந்து, மேஜையில் குப்புறப்படுத்தான். பிறகு, அங்குமிங்குமாக நிமிர்ந்து, முன் கைகளை ஊன்றி, அவற்றில் மோவாயை வைத்துக் கொண்டான். "எப்போ... போர்ட் மீட்டிங்..." என்று பியூன் முனுசாமி வாணியிடம் கேட்டபோது, மெய்யப்பனுக்கு பர்ஸேஸ் ஸ்டேட்மெண்ட் நினைவுக்கு வந்தது. சம்பந்தப்பட்ட ரசீதுகளைப் பார்த்து, ரிஜிஸ்டர்களுடன் ஒப்பிட்டு, ஸ்டேட்மெண்ட் தயாரிக்க வேண்டியது அவன் பொறுப்பு... பாதி தயாரித்து விட்டான். நன்றாக இருக்கும் போதே, பத்து நாள் வாங்கும் வேலை... பாதிதான் முடிந்திருக்கிறது... இன்றைக்குள் ஒரு பாதியை முடித்தாக