பக்கம்:வெளிச்சத்தை நோக்கி.pdf/122

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

180

வெளிச்சத்தை நோக்கி...


எல்லோரும் மெய்யப்பனைப் பார்த்தார்கள். கடித உறைகளில் தபால் தலைகளை ஒட்டிக் கொண்டிருந்த பியூன் முனுசாமி, நம்ப முடியாதவன்போல், அந்த உறைகளை உதறிப் போட்டுவிட்டு, தலையைப் பிடித்தான். 'டைப்' அடித்துக் கொண்டிருந்த வாணி, ‘டைப்' அடிக்காமல், நிமிர்ந்தாள். விமலா தோள்களைக் குலுக்கிக் கொண்டாள்.

குனிந்த தலை குனிந்தபடி இருக்க, கையில் இருந்த ரசீது புத்தகத்தையே வெறித்துப் பார்த்த மெய்யப்பன், அந்த ரசீது புத்தகத்தைக் கிழித்தான். அருகே இருந்த பத்துப் பதினைந்து ஸ்டேட்மெண்ட்களையும் எடுத்து, சுக்கல் சுக்கலாகக் கிழித்தான். பிறகு, இரண்டு கைகளையும் நீட்டி நீட்டி, மடக்கி மடக்கி, தன் தலையிலேயே அடித்துக் கொண்டான். தன் தலையெழுத்து மோசமாக இருந்தால், அது, அடித்த அடியில் ஒழியட்டும் என்று... உள்ளே ஒன்றுமில்லாமல் போன தலை சுக்கல் சுக்கலாக ஒன்றுமில்லாமல் உடையட்டும் என்று. பெண் விவகாரத்தில் டிஸ்மிஸ் ஆகாமல், அலுவலகத் தவறுக்காக டிஸ்மிஸ் ஆகலாம் என்றா? இது அவனுக்கே தெரியாது.

பியூன் முனுசாமி மெய்யப்பனைப் போய் பிடித்துக் கொண்டான். முண்டியடித்து, கைகளைத் தூக்கப்போன மெய்யப்பனை, மார்போடு சேர்த்து அணைத்துக் கொண்டான். வாணி, மெய்யப்பன் அருகே வந்துவிட்டாள். பாஷ்யம், நிதானமாக நடந்து வந்தார். விமலா, எதுவும் தெரியாதவள்போல், வேறு பக்கமாக முகத்தைத் திருப்பிக் கொண்டு, ஓரக்கண்ணை மட்டும் அந்தப் பக்கமாக விட்டு வைத்தாள். மானேஜர், மெய்யப்பன் கிழித்துப் போட்ட காகிதக் கத்தைகளைப் பொறுக்கி, லேசாகப் படித்துப் பார்த்துவிட்டு, முகத்தில் மட்டுமே உயிர் இருப்பதுபோல் அதைத் துடிப்பாக வைத்துக்கொண்டு, உடம்பின் இதர பகுதி முண்டமானதுபோல், அவனையே பார்த்தார். பிறகு, வெறியன்போல் கத்தினார்.