பக்கம்:வெளிச்சத்தை நோக்கி.pdf/123

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சு. சமுத்திரம்

121


"அட பாவி...போர்ட் மீட்டிங்ல வைக்க வேண்டிய ஸ்டேட்மெண்ட்களையா கிழிச்சுப் போட்டே...? ஒன் சீட்டை... நான் கிழிக்கேனா...இல்லையா பாரு... நீ. காரியப் பைத்தியம். ஆபீஸையே பைத்தியமாக்க நினைக்கிறவன்... ஒன்கிட்ட என்ன பேச்சு... எல்லாம் இந்த வாணியால வந்த வினை...ஒனக்கு 'மெமோ' கொடுக்க நினைத்த போதெல்லாம், இந்தப் புண்ணியவதி தடுத்தாள். இல்லன்னா... எப்பவோ... ஒன்னை விரட்டியிருப்பேன்... இனிமேல் நான் யார் பேச்சையும் கேட்கப் போறதில்ல... வாணி, நோட்ஸ் புக்கை எடுத்துட்டு வா... இப்பவே டிக்டேஷன் கொடுக்கேன்... இங்கேயே எடு... மிஸ்டர் மெய்யப்பன் இஸ் அண்டர் சஸ்பென்ஷன் அஸ்... என்ன வாணி ஏன் அப்டி பார்க்கிறே? நோட்ஸை எடு, ஐ ஸே... டேக் டவுன் ஐ ஸே..."

வாணி, மானேஜரை உறுதியுடன் நிமிர்ந்து பார்த்தாள்.

"என்ன யோசிக்கிற..."

"ஒண்ணுமில்ல ஸார்... முன்னப் பின்ன யோசிக்காமல் நானே நடந்துகிட்ட விஷயத்தைப் பற்றி யோசிக்கிறேன்..."

"பாட்டி கதை வேண்டாம். டேக் டவுன் ஐ ஸே..."

“ஸாரி... ஸார்...என்னால முடியாது."

"வாட் யூ மீன்... இப்போ நான் மானேஜர்... நீ ஸ்டேனோ... சொல்றதை எழுத வேண்டியது ஒன் வேலை..."

"சொல்றதை மட்டும் எழுதுறவளாய்...என்னை நீங்க நடத்தியிருந்தால்... நான் இப்படி பேசமாட்டேன் ஸார்..."

'இது ஆபீஸ். பெர்ஸனல் சமாச்சாரம் எதுவாக இருந்தாலும், அப்புறமாய் என் ரூம்ல வந்து பேசு..."

"அதே கேள்வியைத்தான் ஸார் நானும் கேக்கிறேன். மிஸ்டர் மெய்யப்பன் எந்தப் பெண்ணையாவது கூப்பிட்டிருந்தால், அது அவரோட பெர்ஸனல் சமாச்சாரம் அவரை... ஒங்க ரூம்ல கூப்பிட்டு...தனியாய் கேட்டிருக்கணும்...