பக்கம்:வெளிச்சத்தை நோக்கி.pdf/124

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

122

வெளிச்சத்தை நோக்கி...


அவரு தப்பு செய்திருந்தால், நடவடிக்கைகூட எடுத் திருக்கலாம். அதை விட்டுவிட்டு, ஒரு மனிதரை நாலுபேர் முன்னால அவமானப் படுத்திட்டிங்க... அதனால... அவர் என்ன செய்றோமுன்னு தெரியாமல் ஸ்டேட் மெண்ட்களை மட்டும் கிழிச்சதுக்கு நீங்க அவருக்கு நன்றி சொல்லணும்..."

"டோண்ட் டாக் நான்ஸென்ஸ்... நீ இப்போ ஸ்டெனோ... மறந்துடாதே..."

"இல்ல ஸார்... நான் வாணி ...என் தம்பி மெய்யப்பனை, இந்த நிலைக்கு கொண்டுவரக் காரணமானவர்கள்ல ஒருத்தி என்னால... டிக்டேஷன் எடுக்க முடியாது..."

'அவனுக்குப் பிடித்த பைத்தியம்...ஒனக்கும் பிடித்துட்டுன்னு நினைக்கேன். ஆல்ரைட்... மிஸ். விமலா, கொஞ்சம் வந்து டிக்டேஷன் எடுக்கிறீங்களா..?"

விமலா லேசாகத் தயங்கினாள். பிறகு, 'டைப்பிஸ்டில்' இருந்து, 'ஸ்டெனோ' புரமோஷன் கிடைத்தாலும் கிடைக்கலாம் - என்று நினைத்தாளோ அல்லது அதிகாரி சொல்வதற்கு உடனடியாகக் கீழ்ப்படியவேண்டும் என்று நினைத்தாளோ தெரியவில்லை, குறிப்புப் புத்தகத்தை மார்போடு சேர்த்து அணைத்துக் கொண்டு ஓடி வந்தாள். பியூன் முனுசாமியின் முகத்தை அவள் பார்க்கவில்லை. பார்த்திருந்தால், பாதி வழியிலேயே நின்றிருப்பாளோ என்னவோ... நாகப் பாம்புபோல், தலை முடி சிலிர்க்க, நெளிந்து கொண்டே நடந்து வந்தாள். மெய்யப்பன் இன்னும் முனுசாமியின் மார்புக்குள் அடைக்கலமாகக் கிடந்தான்.

மானேஜர், 'மிஸ்டர் மெய்.' என்று சொல்லும்போதே, பியூன் முனுசாமி, மெய்யப்பனை விட்டுவிட்டு, மானேஜர் முன்னால் வந்து நின்றான். வாணி, மெய்யப்பனை, மார்போடு சேர்த்து அணைத்துக் கொண்டாள். அவனோ, செத்துப் போன விழிகளோடு, சவமாய்போன உடம்போடு, ஆடாமல்