பக்கம்:வெளிச்சத்தை நோக்கி.pdf/128

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

126

வெளிச்சத்தை நோக்கி...


வாணி, தனக்குள்ளே புலம்பினாள். 'முனுசாமி, என் சம்பளத்துல பாதி வாங்குறவன் நீ... என் பிள்ளைங்களை மாதிரி, ரெண்டு மடங்கு அதிகப் பிள்ளை குட்டிக்காரன். ஆனாலும், ஒன்னால நிமிர்ந்து நிற்கமுடியுது...சத்தியத்தைப் பற்றிப் பேச முடியுது. ஆனால், நான்...போலித்தனமான வாழ்க்கைக்காக, புனிதத்தையே போலியாக்கிட்டேன். ஒன்னை மாதிரி, என்னால சத்தியத்தைப் பற்றிப் பேச முடியலியே... நிமிர்ந்துகூட பார்க்க முடியலியே... சத்தியத்தைப் பேசக்கூட வேண்டாம்... பேசுற வார்த்தையைக் கேட்ககூட யோக்கியதை இல்லாமல் போயிட்டேனே... ஒரேயடியாய் போயிட்டேனே...'

16

கையோ, காலோ வெட்டுப் பட்டால், எடுத்த எடுப்பிலேயே வலியை உணரமுடியாது. அப்புறம் அந்த வலி தவிர, வேறு எந்த வலியும் தெரியாது. இதுபோல், உள்ளத்தில் இருந்து முற்றிலும் உணர்வு துண்டிக்கப் பட்டவனாய் தோன்றிய மெய்யப்பனை, அவன் அறைக்கு வந்ததும், வெட்டுப்பட்ட தன்மான உணர்வுகளுடன், வெட்டப்படாத இதர உணர்வுகள் துடிக்க வைத்தன. துவள வைத்தன. ஆடைகளை யாராவது அகற்றி, அவனை நிர்வாண மாக்கியிருந்தால்கூட பரவாயில்லை. சிறு வயதிலே அப்படி இருந்ததை நினைத்துக் கொள்ளலாம். ஆனால், உள்ளமே அம்மணமாக்கப்பட்டு அதிலிருந்த மனிதத்துவமே கொலை செய்யப்பட்டாகி விட்டது. மனிதன் வாழ்வதே நான்குபேர் கண்ணெதிரில் நன்றாகத் தோன்ற வேண்டும் என்றுதான்.