பக்கம்:வெளிச்சத்தை நோக்கி.pdf/129

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சு.சமுத்திரம்

127


தனக்காக வாழ்வது கால் பங்கு என்றால், பிறத்தியாருக்காக வாழ்வது அல்லது வாழ்வதுபோல் நடிப்பது முக்கால் பங்கு... கால் பங்கு உயிரோடு ஏன் இருக்க வேண்டும்? இப்போது, நான் இருந்துதான் ஆகவேண்டும் என்று என்ன இருக்கிறது...?யார் இருக்கிறார்கள்... அம்மாவா...அண்ணன் தம்பியா... மனைவி மக்களா... எனக்கு நானே அப்பன்... எனக்கு நானே அம்மா...அக்காள்... அண்ணன்... நான் சர்வேஸ்வரன்... அவனைவிட மேலானவன்... அவனுக்கு மனைவி உண்டு. மக்கள் உண்டு. எனக்கோ 'சக்தி இல்லை':

மெய்யப்பன், வயிறு குலுங்கச் சிரித்தான். வாய் குலுங்கச் சிரித்தான். காதடைக்கச் சிரித்தான். கழுத்திழுக்கச் சிரித்தான். அவன் கண்களில் மரணப் பிரகாசம் ஒளிர்ந்தது. மாணவப் பருவத்தில், அரசியலில் தீவிரமாக இருந்தபோது, நேருவின் சுயசரிதையைப் படித்திருக்கிறான். அதில், அவர் 'நம் துன்பங்களுக்கெல்லாம் மரணம் முற்றுப்புள்ளி வைக்கும் என்பதை நினைக்கும்போது, மரணமே இனிமையாகத் தோன்றுகிறது' என்று எழுதியது நினைவுக்கு வந்தது. அவர், கஷ்டங்களால் ஒருவன் கலங்கக்கூடாது என்பதற்காச் சொன்னார். இவனோ, அதை, கஷ்டங்கள் கூடினால் காலமாக வேண்டும் என்று எடுத்துக் கொண்டான்.

எப்படியோ, தன் பிரச்சினைக்கு - பிரச்சினையாகப் போன தனக்கு, ஒரு தீர்வு கண்டுபிடித்து விட்டான். மரணத் தீர்வு. தனக்குத்தானே வழங்கப்போகும் தண்டனையை உதவியாக நினைத்து அவன் அழுதான். இப்போது, கூரை விழவில்லை. பாதாளம் தெரியவில்லை. விமலா வரவில்லை. பட்ட அவமானம் தெரியவில்லை. சத்யாவைக் காணவில்லை. எதுவுமே தோன்றவில்லை. மரணத்தைத் தவிர, எல்லோரும் எல்லாமும் போய்விட்டார்கள்; போய்விட்டன. மரணம் ஒன்று மட்டுமே எதிரே நின்றது. இரு கரம் விரித்து. தாயைப் போல - தோளில் தூக்கும் தந்தையைப் போல.

மெய்யப்பன் இருட்டிய பார்வையோடு எழுந்தான். கட்டிலுக்கடியில் தாம்புக்கயிறு கிடந்தது. கார்ப்பரேஷன்