பக்கம்:வெளிச்சத்தை நோக்கி.pdf/13

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சு.சமுத்திரம் 11

பக்கத்துல பார்த்தோம். இன்னும் என்ன பண்றார்' என்றாள் ஒருத்தி. 'வழில எவனாவது மடக்கி இருப்பான்-' என்றாள் ஒருத்தி... 'எவனாவதா... இல்ல... எவளாவதா' என்று ஒருத்தி திருத்தப் பிரேரணை கொண்டு வந்தாள். 'வழில போன எவனையாவது... இவருதான் மடக்கி... வாயைக் கிளறிக் கொண்டு இருப்பார்' என்றாள் மற்றும் ஒருத்தி.

திடீரென்று, சைனா பஜாரில் யானை புகுவது மாதிரி, மெய்யப்பன் உள்ளே வந்தான். கண்கள், முகத்தை ஆட்டாமலே நாலு பக்கமும் சுழல, விறுவிறுவென்று நடந்தவன், அந்தப் பெண் குவியலுக்குச் சற்றுத் தள்ளி நின்று கொண்டே, அலுவலகப் பிரஜைகளைக் கம்பீரமாகப் பார்த்தான். ஒரு நாற்காலி காலியாக இருப்பதையும் பார்த்து நெஞ்சைத் தடவி விட்டுக் கொண்டான். அளவுக்குச் சற்று அதிகமான உயரம், அளவுக்குச் சற்று மங்கலான பானை நிறம். யாரையாவது பார்த்தால், கழுத்தைக் குழைந்து வளைக்காமல், சட்டென்று வளைத்துப் பார்க்கும் வேகக்காரன். ஒல்லியாக இருந்தாலும், வைரப்பட்ட உடம்பு.

அவனைப் பார்த்ததும், "அடேய் தடிராமா" என்றான் குமார். "தம்பீ” என்று பல்லெல்லாம் பாசமாகக் கூப்பிட்டாள் வாணி. "கடன்காரா... பாட்டியை நல்லா அனுப்புனியோ.." என்றார் பல்லெல்லாம் பாசி படர்ந்த பாஷ்யம், யூனிபாரத்தைக் கழற்றிப் போட்டுவிட்டு, வெள்ளை வேட்டி, மஞ்சள் சட்டையோடு வந்த பியூன் முனுசாமி, "என்ன தலைவரே" என்றான்.

எல்லோரும் ஒரே சமயத்தில் பேசியதுபோல் இருந்ததால், மெய்யப்பன், காதுகளை இருகையாலும் பொத்திக் கொண்டு "ஒன் பை ஒன் பிளீஸ்..." என்றான். உடனே குமார், "ஒன் மனசுல என்னடா நெனப்பு... பெரிய ரஜினிகாந்துன்னு எண்ணமோ" என்றபோது, மெய்யப்பன், அந்த நடிகர் மாதிரி ஒரு கோணலான கராத்தே வீச்சை வீசுவதுபோல், கையை நீட்டி, முகத்தை வளைத்து 'டூயிங்' என்றான். "மூன்றரை மணிக்கு டிரெயின்... இவ்வளவு நேரமும்