பக்கம்:வெளிச்சத்தை நோக்கி.pdf/132

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

130 வெளிச்சத்தை நோக்கி...

பிறகு, அதில் தன் முகத்தைப் புதைத்துக் கொண்டான். அவன் விட்ட கண்ணீர், அவள் குவித்த கைகளில் தேங்கி, அதில் அவன் முகம் மிதப்பதுபோல் தோன்றியது. சத்யா, மெதுவாக, விட்டுவிட்டுப் பேசினாள்.

"உங்களை இந்த நிலைக்குக் கொண்டு வந்த பாவி நான்தான். நீங்கள் இப்படி ஏதாவது பண்ணுவிங்கன்னு நினைத்துதான்... உயிரை விடுவிங்கன்னு நினைச்சுதான்... நான்... என் உயிரை விடாமல் இருக்கேன். இல்லன்னா... அண்ணன் அடிக்கிற அடிக்கும், அண்ணி பேசுற பேச்சுக்கும்... எப்பவோ உயிரை விட்டிருப்பேன். இல்லன்னால் எங்கேயாவது ஓடியிருப்பேன்... தாழ்கிறவன் தாழ்ந்துக்கிட்டே இருக்கப் போறதில்ல... கஷ்டத்துக்கே சாவு வரும்படியாய் நடந்துக்கணும்... கஷ்டத்தால சாகப்படாது..."

மெய்யப்பனின் கைகள் நோகக்கூடாது என்பதுபோல், அவற்றை மெல்ல விலக்கிக்கொண்டு, அவள் திரும்பாமலே, பின்புறமாக நடந்தாள். பிறகு, தன் நிலையும், அண்ணியின் போக்கும் தெரிந்தவள்போல், அவனிடம் 'நான்.... ஒரு உயிர் அநியாயமாய் போகப்போகுதேன்னுதான் அப்படிப் பேசினேன். வேற விதமாய் அர்த்தப் படுத்தாதிங்க...' என்று சொல்வதற்காகத் திரும்பினாள். மெய்யப்பன், ஜன்னல் கம்பிகளில் முகம் பதிய, கைதிபோல் பார்த்தான். சத்யாவிற்கு, சொல்லவந்ததை, சொல்ல மனமில்லை.

ஜன்னல் பக்கம், அண்ணியின் முதுகு தெரிந்தது. பார்த்திருப்பாளோ... பார்த்தால் பார்க்கட்டும்... விரட்டினால் விரட்டட்டும்...

சத்யா, சென்ற வழியிலேயே சென்றாள். அண்ணி பார்த்திருப்பாளோ... பார்த்தால் என்ன... ஒருவேளை, வீட்டிற்குள் வந்தபிறகு பேசிச் கொள்ளலாம் என்று காலன்போல் காத்திருக்காளோ.... திட்டுவாளோ,.. திட்டட்டும்...‌

'ஒரு உயிர் - அதுவும் சூதுவாதில்லாத ஒரு ஜீவன், அநியாயமாய் போகப் பார்த்தது. அதை ஒருத்தி பார்க்கிறாள்.