பக்கம்:வெளிச்சத்தை நோக்கி.pdf/133

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சு.சமுத்திரம் 131

நூறு பேருக்குப் பயந்து, தானே அந்தத் தற்கொலையைத் தடுக்காமல், பிறத்தியாரிடம் சொல்வதற்காக அவள் போனாலும், அவள் பெண்ணல்ல.... அச்சம், மடம், நாணம் என்ற அனாவசியங்களின் பேரில் எமலோகத்திற்கு ஒருத்தி இடம் கொடுத்தால், அவள் நிஜமாகவே நாணமற்றவள். ஒரு உயிர் போவதைப் பற்றிக் கவலைப்படாமல் இருந்தால், அவள் பெண்மையற்றவள்... 'அண்ணி பேசினால் பேசட்டும்... பதில் சொல்ல எனக்கும் தெரியும். விரட்டினால்? விரட்டட்டும்.... வீட்டுக்குள்ளே விரட்டப்படுவதைவிட...... ஒரேயடியாய் வெளியே விரட்டுறது எவ்வளவோ மேல்...’

தன்னைவிட வயதில் பெரிய ஜீவனைப் பிரசவித்த இன்ப துன்ப வேதனையுடன், 'நாணமும், அச்சமும் நாய்களுக்கு வேண்டுமாம்' என்ற பாரதியாரின் பாட்டுக்குப் பொருள் போல், முல்லைக் கொடிபோல் தோன்றிய அந்த முடக்கொடி, ஊனக்காலில் கை ஊன்றியபடி, வைராக்கியம் உள்ளமெங்கும் வரையப்பட்டதுபோல் நடந்தாள்.

17

ஒருசில நாட்கள் வரை, முகத்தில் சிரிப்பு இல்லை யானாலும், சிலிர்ப்புக் காட்டாமல் இருந்த மெய்யப்பன், மீண்டும் முடங்கிக் கொண்டதும், சில சமயம் மேஜை, நாற்காலிகளைக் குத்துவதையும் பார்த்த சத்யாவிற்குத் தன் 'வாழாவெட்டி' பிரச்சினையைவிட, அவன் பிரச்சினையே பெரிதாகத் தெரிந்தது.