பக்கம்:வெளிச்சத்தை நோக்கி.pdf/14

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

12 வெளிச்சத்தை நோக்கி...

என்னடா பண்ணினே." என்று குமார் அதட்டியபோது, மெய்யப்பன் அவன் முன்னால்போய், தன் காதுகளைப் பிடித்துக் கொண்டு, தோப்புக் கரணம் போடுவது போல் போட்டான். எல்லோரும் சிரித்துவிட்டார்கள்.

அக்கெளண்டன்ட் பாஷ்யம் வெற்றிலைக் காம்பைக் கிள்ளியபடியே, "ஏம்பா... பாட்டி இறந்துட்டான்னுதானே ஊருக்குப் போனே... மொகத்துல... துக்கக் குறியே... காணுமேடா..." என்றார்.

"என்னை... என்ன... அவளோட உடன்கட்டை ஏறச் சொல்றீங்களா, அக்கெளண்டன்ட் ஸார்... இந்தக் கூத்தைக் கேளும்... பாட்டியை மூலையில் சாத்தி வச்சிருக்கு... ஊர்ல உள்ள பெண்ணுங்கெல்லாம்... திரண்டு வந்து ஒப்பாரி வச்சாங்க... முந்தானை சேலையை விசிறி மாதிரி அடித்து, முகத்துக்கெதிரே வீசிக்கிட்டே அழுதாங்க... 'அடடே நம்ம பாட்டிக்கா இவ்வளவு விசிறிகள்’னு நினைச்சேன்... கடைசில என்னடான்னால்... இழவுக்கு வந்த ஒவ்வொருத்தியும்... செத்துப்போன அம்மாவையும், சாகாம இருக்கும் மாமியாரையும் நினைத்து அழுகுறாளுங்க... பாட்டிக்கு அழ யாருமே இல்ல..."

"நீயாவது அழுதியோ... மாட்டே... லோகத்துல... அம்மாவோட அம்மா இறந்தால்தான் பேரப் பிள்ளிங்க அழும்... அப்பாவோட அம்மா செத்தால் சிரிக்கும். இதுக்கென்று ஒரு ஆராய்ச்சியே பண்ணலாம்..."

"அதை நீங்களே செய்யுங்களேன். ஸார்... ஒரு வருஷம் ஸ்டடி லீவ்ல போங்க... ஆபீஸும் உருப்பட்டாப்ல இருக்கும். ஆராய்ச்சியும் முடியும்..."

பாஷ்யம் கோபத்தோடு மெய்யப்பனைப் பார்த்துத் தலை நிமிர்த்த அவன் பிசிறில்லாது சிரித்த சிரிப்பு தொற்றிக் கொள்ள, சிரிப்போடு தலையைக் கீழே போட்டார். வாணி, மெய்யப்பனைப் பெருமிதத்துடன் பார்த்துக் கொண்டே