பக்கம்:வெளிச்சத்தை நோக்கி.pdf/142

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

(18)

பெரியவர் யோகப் பயிற்சியைச் செயல் முறையில் விளக்கிவிட்டுப் போய்விட்டார்.

மெய்யப்பன் எழுந்தான். தலையைக்கூட வாரிக் கொண்டான். குளியலறைக்குப் போய் முகத்தை அலம்பிவிட்டு வெளியே வந்தபோது, சத்யா, கருணை பொங்கச் சிரித்தாள். சிறிதுநேரம், அவளையே பார்த்துக் கொண்டு நின்றான். அவள், அவனுக்குப் பயந்தவள்போல் உள்ளே போய், மீண்டும் வெளியே வந்தாள். அவனைப் பார்க்கப் பார்க்க, மேலும் பார்க்கவேண்டும் போலிருந்தது. கழுத்தில் தொங்கிய தாலியை, கழுத்தோடு சேர்த்து, பயபக்தியுடன் பிடித்துக் கொண்டாள். தாலி, அந்த மென்கழுத்தில் முள்மாதிரிக் குத்தியது.

மெய்யப்பனும் வெளியே வந்தான். நாயர் கடைக்குப் பக்கத்திலேயே, சாமி படங்கள், தலைவர் படங்கள், நடிகர் நடிகையர் படங்கள் முதலிய பலதர படங்களை விற்கும் கடை இருந்தது. கையில் தண்டு மட்டும் கொண்ட, தண்டாயுதபாணி படத்தையும், வேலை மார்பில் சாத்தியபடி, பின்புறமாக நின்ற மயிலை அணைத்தபடி, அருள் பொங்கும் கண்களோடு, அபயமளித்த கரத்தோடு விளங்கிய பாலமுருகன் படம் ஒன்றையும் வாங்கிக் கொண்டான். நீண்ட இடைவெளிக்குப் பிறகு, அன்றுதான் மகிழ்ச்சி என்ற ஒரு உணர்வும் இருக்கத்தான் செய்கிறது என்பதை உணர்ந்து கொண்டான்.

அறைக்கு வந்து, இரண்டு படங்களையும் வைத்துவிட்டு, ஊதுபத்தி வாங்காமல்போன தன் முட்டாள் தனத்திற்குத் தலையில் குட்டிக்கொண்டே வெளியே போகப் போனான். அந்தப் பக்கமாக வந்த சத்யாவிடம், 'ஊதுபத்தி இருக்குதா' என்றும் கேட்டு வைத்தான். அவள், அவனை அங்கேயே நிற்கும்படிச் சைகை செய்துவிட்டு, வீட்டுக்குள் வேகமாய் நடந்து, இரண்டு ஊதுபத்திகளைக் கொண்டு வந்து கொடுத்தாள்.