பக்கம்:வெளிச்சத்தை நோக்கி.pdf/144

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

142

வெளிச்சத்தை நோக்கி...


எம்.டி.க்கு ரகசியமாய் எழுதியிருக்கானாம். விமலாதான் அதை டைப் அடிச்சாளாம். ஒங்ககிட்ட எத்தனை தடவை வாங்கித் தின்ன நாயி... நீ கொடுத்ததெல்லாம் தின்னுதின்னு... இப்போ ஒன்னையே தின்னப் பார்க்காள். போனால் போகுதுன்னு கம்முன்னு இருந்த மானேஜரை, இந்த விமலாதான் சீண்டி விட்டாளாம். அவள், ஒன்னைப் பற்றி மானேஜர்கிட்ட தாறுமாறாய் பேசுனப்போ, காபி கொண்டு போன 'வாட்ச்மேன்' நாகரத்தினம் கேட்டுட்டான். இப்போ.... எனக்கு மேல.... அவனும் குதிக்கான். போற போக்கைப் பார்த்தால், என் கத்திக்கு வேலை இருக்கும் போலுக்கு..."

மெய்யப்பன் எதுவும் பேசவில்லை. நடந்ததை நம்ப முடியாதவன் போலவும், நடக்கப் போவதை நம்புகிறவன் போலவும், அவன் பிரமித்து நின்றான். சிறிதுநேரம் அங்கேயே நின்ற முனுசாமி, "நாளைக்கு வாரேன்..." என்று சொல்லிவிட்டுப் போய்விட்டான். அவனுக்கு அங்கே இன்னும் இருக்க மனமிருந்தாலும் நிலைமை துரத்தியது. அவன் வீட்டுக்குப் போய்தான் அடுப்பெரிய வேண்டும்.

மெய்யப்பன் முருகன் படங்களையே பார்த்தான். கோபத்தோடு பார்த்தான். திடீரென்று, தனக்கு வேலை போய், முருகன்போல் தானும் கோவணம் கட்டிக்கொண்டு, தெருத் தெருவாய் பிச்சை எடுப்பது மாதிரியான ஒரு எண்ணம். பாலமுருகனைப் பார்த்தான். முருகனின் வேல் அவனைக் குத்திக் குடைவது போன்ற ஒரு பயம். அதுவும் நெஞ்சுக்குள்.... அவன் கைகளால் மார்பை மூடிக் கொண்டான். மயில் அவன் கண்களைக் கொத்தி கொத்தி, வெளியே இழுப்பதுபோன்ற பிரமை, கண்களை மூடிக் கொண்டான். மயிலுக்கு ஆசனம் கொடுத்த பாம்பு, அவன் உடம்புக்குள் புகுந்து, இதயத்தைக் கடிப்பது போன்ற பயவுணர்வு... லேசான வலி...

மெய்யப்பன் ஜன்னல் பக்கமாய் போய் உட்கார்ந்தான். அதலபாதாளத்திற்கு அந்த ஜன்னலுடன் போகிறான். கூரை இடிந்தது. கைகால்கள் துண்டித்து விழுகின்றன. விமலா