பக்கம்:வெளிச்சத்தை நோக்கி.pdf/146

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

144 வெளிச்சத்தை நோக்கி...

அப்படியே ஆயிட்டேன். ஒன் நண்பன், மெய்யப்பன்... பொய்யப்பனாய் போயிட்டான். நீ கூட.... நேற்று வந்தவன்... இப்பத்தானே வந்து பார்க்கிறே... குமார், எனக்கு சாவு நெருங்கிட்டு... அதுவரைக்கும் நீ பக்கத்துலே இரு.... நீ, அதிக நாள் அப்படி இருக்க வேண்டியது இருக்காது."

மெய்யப்பன் அழவில்லை. குமார் அழுதான். நண்பனைக் கட்டிப் பிடித்து, குழந்தையைத் தாலாட்டுவது போல், அவனை ஆட்டிக் கொண்டே விம்மினான். பிறகு கண்ணீர் அக்கினித் திராவகம் ஆனதுபோல், விழிகள் எரிமலையாய் வெடிப்பதுபோல் வெடித்தன.

"எல்லாம்.... என்னால வந்தது... நீ பிரச்சினையை சொன்னபோது, நான் லேசா எடுத்துக்கிட்டேன். அதோட.... பட்டால்தான் ஒனக்கு புத்தி வருமுன்னு நினைச்சேன். இப்படி புத்தி போகுமுன்னு நினைக்கல. ஒரு வாரத்திற்கு முன்னால.... குற்றாலத்திற்கு வந்திருந்த ஒரு சைக்காட்ரிஸ்டை தற்செயலாய் பார்த்தேன். மனோ விகாரங்களைப் பற்றி பேசின.... அவர்கிட்ட... உனக்கு வந்த பிரச்சினையை, சிரிச்சுக்கிட்டுதான் சொன்னேன். அவருதான், அழ வேண்டிய விவகாரத்திற்கு சிரிக்கிறீங்களேன்னு சொல்லிவிட்டு, உனக்கு வந்திருக்கிறது 'போபியா,' புற்றுநோயைவிட மோசமானது என்றார். புற்று நோயாவது, உடலைக் கொன்று, உயிரை வாங்கும். இதுவோ, உயிரைக் கொன்று, உடலை வாங்குமுன்னார்... நேற்று ஆபீஸ்ல எல்லா விபரமும் கேள்விப்பட்டேன். இப்போ மொதல்ல கவனிக்க வேண்டியது ஒன் மனநோய்தான். மற்ற விவகாரம் அப்புறம்... நல்லவேளையா, அந்த சைக்கியாட்ரிஸ்டோட அட்ரஸை வாங்கி வச்சிருந்தேன். நேற்று ராத்திரி, அவரைப் போய் பார்த்தேன். ஒன் வாழ்க்கை வரலாற்றை, அற்ப விஷயந் தானேன்னு எதையும் விடாமல், சிறு வயதில் இருந்து இப்போ நான் பேசிக்கிட்டு இருக்கிற இந்தத் தருணம் வரைக்கும்... நடந்த எல்லாவற்றையும்.... நினைவுக்கு வந்ததையெல்லாம் எழுதிக் கொண்டு வரச்சொன்னார்."

“ஓ... சுயசரிதை எழுதணுமா.... நான் தலைவர்தான் போலுக்கு..."