பக்கம்:வெளிச்சத்தை நோக்கி.pdf/147

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சு.சமுத்திரம் 145

"பினாத்துறதுக்கு நேரமில்ல... ஏற்கெனவே, நீ ரெண்டு மூன்று கதை எழுதிப் பழக்கப்பட்டவன்தானே... எழுது, நீ, எழுதுறதையே, நாவலாய் போடலாம்... ஆமாண்டா... நிஜமா சொல்றேன்... ஆனானப்பட்ட சார்லஸ் டிக்கன்ஸே இந்த மாதிரி நிலையில் இருந்தவர்தான்."

மெய்யப்பன், குமாரை வியப்போடு பார்த்தான். முருகனின் படங்களைக் குற்றவுணர்வுடன் நோக்கினான். 'அவசரம் அச்சத்தின் அறிகுறி... அவசரம் என்பது வேறு... வேகம் என்பது வேறு...' என்று சொல்வதுபோல், பாலமுருகன் அபயக் கைகாட்டிச் சிரிக்கிறான். நிதானத்தின் வேகன்போல், பழனியாண்டி பார்க்கிறான்! மெய்யப்பன், தூசி படிந்த நாற்காலியை, மேஜைப் பக்கமாய் இழுத்துப் போட்டுக் கொண்டு, பேனாவை எடுத்துக் கொண்டே, உட்கார்ந்தான். குமார், தன்னோடு தயாராகக் கொண்டு வந்திருந்த அரைக்குயர் வெள்ளைக் காகிதத்தை மேஜையில் வைத்தான்.

மெய்யப்பன் எழுதத் துவங்கினான். துவக்கத்தில், எதுவுமே வரவில்லை. திடீரென்று எண்ணங்கள் பொங்கின. இளமைக் காலத் தாபங்களும், கோபங்களும், பேனா முனை வழியாக, தாளில் எழுத்துக்களாயின. எழுத்து வேலையில் ஈடுபட்டுக் கொண்டே, அவன் அவ்வப்போது, தன் தலையைக் குத்திக் கொண்டான். தானாகச் சிரித்துக் கொண்டான். மேஜையை அடித்துக் கொண்டான்.

குமார், அவ்வப்போது, அவன் தோளை ஆதரவாகப் பற்றிக் கொண்டான். பள்ளிக்கூடத்தில் கட்டுரைப் போட்டியிலும், ஒரு நியாயமான இலக்கியச் சங்கம் நடத்திய சிறுகதைப் போட்டியிலும், எடுத்த எடுப்பிலேயே முதல் பரிசுகள் பெற்ற அவன், இப்போது வாழ்க்கைப் போட்டியில் தோற்றுப் போனதால், மீண்டும் எழுதுகிறான். தோல்விகள், வெற்றியின் படிக்கட்டுகள் என்பார்கள். ஆனால், தன்னைப் பொறுத்த அளவில், வெற்றிகளே, தோல்விகளின் படிக்கட்டுகளாய் போனதை அறிந்தவன்போல் எழுதினான். எண்ணங்களே, எழுத்துக்களாக எழுதிக் கொண்டேயிருந்தான்.