பக்கம்:வெளிச்சத்தை நோக்கி.pdf/15

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சு.சமுத்திரம் 13

நின்றாள். பிறகு, "தம்பீ! நீ இன்னைக்கு என் வீட்லதான் சாப்பிடணும்..” என்றாள். உடனே குமார், "என்னோட வாரான்... வராட்டால் உதை கிடைக்குமுன்னு தெரியும்" என்றான்.

மெய்யப்பன், குமார் அருகே சென்று, ஒரு கூழைக் கும்பிடு போட்டு, "டேய்... உதைச்சாலும் சோத்தால உதைடா..." என்று சொல்லிவிட்டு வாணியை நோக்கி, "அக்கா... இந்த ரெளடிப் பய... சொன்னபடி உதைக்கிறவன்... இன்னொரு நாளைக்கு வாரேன்..." என்றான்.

அதுவரை பேசாமல் இருந்த சந்தானம், "அங்கேயும் சாப்பிட்டுட்டு , அப்புறமாய் வாணி வீட்லயும் சாப்பிடுங்களேன் சார்... ஒங்களுக்கென்ன அது முடியாத காரியமா?" என்றான்.

"டேய் படுபாவி... கண்ணாடா போடுறே... வாணிக்கா... இவன் காலடி மண்ணை எடுத்து வைங்க... நாளைக்குச் சுத்திப் போடணும்... இல்லன்னா...என் வயிறு வீங்கிடும்..."

கனகம் குழைந்தாள். "மெய்யப்பன் ஸார்... பாட்டி செத்ததும் அவளோட மோதிரத்தை எனக்குத் தாரதாய் சொன்னீங்களே..."

கனகம் விளையாட்டாகத்தான் முன்பு கேட்டாள். அவனும் விளையாட்டாக, 'அதுக்கென்ன'என்பது மாதிரிதான் சொன்னான். ஆனால் இப்போது சட்டைப் பையைத் துழாவி, கால் பவுன் மோதிரத்தை எடுத்து நீட்டினான். கனகம் கையை நீட்டாமல் நின்றபோது, "எங்க ஊர் வழக்கப்படி. பாட்டியோட நகை... பேத்திகளுக்குத்தான சேரணும். நீயும் எனக்கு தங்கை மாதிரிதானே... போட்டுக்கோ... இன்னொண்ணு இருக்கு... அது வாணியக்காவுக்கு..." என்றான். கனகம், 'இப்படியுமா ஒருவர் இருக்க முடியும்' என்பதுபோல் அவனைப் பார்த்தபோது, 'என் தம்பின்னா.... இப்படித்தான்' என்பதுபோல் வாணி பார்த்தாள்.