பக்கம்:வெளிச்சத்தை நோக்கி.pdf/153

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சு.சமுத்திரம்

151


"அழாதீங்க.... மிஸ்டர் மெய்யப்பன்... நீங்க எதுக்காக உயிர் விடணும்...? உங்கள் வாழ்க்கையில்அர்த்தமில்லன்னு ஏன் நினைக்கணும்? அப்படியே வச்சிக்கிட்டாலும் வாழ்றவங்க எல்லாம் அர்த்தத்தோடயா வாழ்றாங்க? சுய இரக்கம் வேண்டாம் மிஸ்டர். என்னால உங்களை நிச்சயம் குணமாக்க முடியும்... உங்களோட இந்த நிலைமைக்கு, இந்த சமூக அமைப்பு முக்கால் காரணம்... நீங்க வெட்கப்பட வேண்டியதில்ல... ஒங்களுக்குச் சின்ன வயதிலேயே... பாதுகாப்பு இன்மை உணர்வு ஏற்பட்டுட்டு... அடி மனதில் வேர்விட்டு, வேரை வெட்டிட்டால்... மரம் விழுந்திடும்... டோன்ட்... ஒர்ரி..."

குமார், ரகுராமனிடம், முழு விபரமும் சொல்ல நினைத்து, சொன்னான்: "தலையிடுறதுக்கு மன்னிக்கனும் டாக்டர்... இவன் ரொம்ப உறுதியான ஆளாய் இருந்தவன் ஸார். மூன்று மாதத்துக்கு முன்னால வரைக்கும்... துணிச்சலுக்குப் பேர் போனவன். நீங்க சொல்ற பாதுகாப்பு இன்மை உணர்வு அவனுக்குக் கிடையாது... இன்னும் சொல்லப்போனால், நாங்கெல்லாம் இவனோட பாதுகாப்பைத் தேடுவோம்... எல்லாம், விமலா... வாணி... லேடீஸால வந்த வினை..."

ரகுராமன், புன்னகைத்தபடியே, "மிஸ்டர் குமார்... எனக்கு ஒரு உதவி செய்யறீங்களா...?” என்றார்.

"சொல்லுங்க ஸார்..." என்றான் குமார்.

"பேசாமல் நீங்க என் நாற்காலியில் உட்காருங்க... நீங்களே சிகிச்சை கொடுங்க..."

ரமா, கலகலன்னு சிரித்தாள். பிறகு, கணவனைக் கண்டிப்பதுபோல் பார்த்தாள்.

குமார், திருட்டுத்தனமாகச் சிரித்துக் கொண்டே, அவரைச் சங்கடத்தோடு பார்த்தான். பிறகு, "ஸாரி ஸார்..... அப்நார்மலாய் நடந்துக்கிட்டேன்" என்றான்.