பக்கம்:வெளிச்சத்தை நோக்கி.pdf/155

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சு.சமுத்திரம்

153

ரமா, கணவனின் உணர்வை போற்றுபவள் போலவும், அவரது 'ஈகோ' பாதித்து, தாழ்வுணர்வு அடி மனத்திற்குப் போய்,.. தனக்கு இல்லறத் துன்பம் தரலாகாது என்று நினைத்தவள் போலவும்.., சற்று கோபமாகவே பேசினாள்... "நீங்க... இப்பதான் அப்நார்மலாய் நடந்துக்கிறீங்க... மிஸ்டர் குமார்... அதனாலதான், வரவேற்பு அறையிலேயே உங்களை உட்காரச் சொன்னது... புரியாத விஷயங்களை தெரியாமல் கேட்டு, தெரிந்தது மாதிரி பேசுறது... ஒருவித அப்நார்மல் போபியா... இவரு... எத்தனையோ கான்பரென்ஸ், மீட்டிங்ஸ் போனவர்... நான் ஆப்டர் ஆல் சைக்காலஜில ஒரு எம்.ஏ."

ரகுராமன், பெருமிதத்துடன் மனைவியை அதட்டினார். "நீதான்.... இப்போ அப்நார்மலாய் நடந்துக்கிறே... ரமா...! மிஸ்டர் குமாரோட கவலையை நாம் புரிஞ்சுக்கணும்... மிஸ்டர் குமார்! அவங்க சொன்னது பிஹேவியர் திராபி... அதாவது... இவரோட ஒவ்வொரு பிரமையையும் நினைக்கச் சொல்லி... அந்த நினைப்புல அவர் தவிக்கும்போது, சிகிச்சை கொடுப்பது. அவர் கையில் காலில் லேசாகக் குத்தியோ... அல்லது விரும்பத்தகாத சத்தத்தை எழுப்பியோ... 'ஸ்டாப் ஸ்டாப்' என்று சொல்லி அந்த எண்ணத்தை நிறுத்தலாம். இதனால. அந்த அரக்கத்தனமாக எண்ணம், விரும்பத்தகாத செயலோடு இணைக்கப்பட்டு, அது பிடித்து வைத்திருக்கும் நல்ல உணர்வு தனிமையாகும்... இது மாடர்ன் முறை... விஞ்ஞானப் பூர்வமானது. நான் கொடுக்கப் போறது, வேற மாதிரியானது... அது பலிக்காட்டால், இந்த முறையை பயன்படுத்தலாம். இப்போ சில டெக்னிக்கல் காரணங்களுக்காக அதைக் கொடுக்க விரும்பல... மொத்தத்துல,.. 'எப்போ குணமாக்குவிங்க'ன்னு கேளுங்க... எப்படின்னு கேளாதீங்க..."

குமார், தழுதழுத்த குரலில் மன்னிப்பை மன்றாடினான்.... “ஸாரி ஸார்... எனக்கு பொறுமையாய் விளக்கிட்டிங்க... உண்மையிலேயே நீங்க பெரிய மனிதர். வித்தியாசமானவர்..."

"வயசாயிட்டுன்னு சொல்றீங்களா...? இல்ல அப் நார்மல் என்கிறீங்களா..?" ரகுராமன் மோகனமாகச் சிரித்தார்".

11