பக்கம்:வெளிச்சத்தை நோக்கி.pdf/156

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

154 வெளிச்சத்தை நோக்கி...

குமார் சங்கடத்தோடு சிரித்தான். சங்கோஜத்துடன் ரமாவைப் பார்த்தான். அவள் 'இது சகஜம்' என்பதுபோல் புன்னகை வீசினாள். ரமாவும், குமாரும் வெளியேறினார்கள். ரகுராமனும், மெய்யப்பனும் அந்த அறையில் தனித்து விடப்பட்டார்கள்.

மெய்யப்பனைக் குணப்படுத்த முடியுமா என்று அந்த மனோதத்துவ நிபுணர்களும், சந்தேகத்தில் தவிப்பது குமாருக்குப் புரியவில்லை.

20

ரகுராமன், மெய்யப்பனைக் கருணை ததும்பப் பார்த்தார்.

சாம்பல் நிறத்தில், நீறுபூத்த கண்களுடன், எந்தவித இயக்கமுமின்றி, பிரிந்திருந்த உதட்டோடு, குழிவிழிந்த கண்களோடு, தாடையை மறைத்த தாடியுடன், குழைந்த உடம்போடு, குச்சிக் கைகால்களோடு, நாற்காலியில் சாத்தி வைக்கப்பட்ட பிணம் போல் உட்கார்ந்திருந்த மெய்யப்பனைப் பார்த்ததும், அவருக்கும், தொழிலை மீறிய மனிதாபிமான உணர்வுகள் அதிகமாயின. "எழுந்திருங்கள்... மிஸ்டர் மெய்யப்பன், அதோ அந்த சாய்வுப் படுக்கையில் போய் படுங்கள்" என்றார்.

யந்திரமயமாய் எழுந்த மெய்யப்பன், அப்போதுதான் அந்த அறையைப் பார்த்தான். பச்சை வண்ணம் தீட்டிய சுவர், மேஜையைச் சுற்றிய நாற்காலிகளையும் சாய்வுப் படுக்கையையும் அதற்கு அருகே ஒரு நாற்காலியையும் அந்தப் படுக்கைக்கு எதிர்ச்சுவரில் தொங்கிய ஒன்றுக்கு மேல் ஒன்றாய் வரையப்பட்ட பல வட்டக்கோடுகளையும்,