பக்கம்:வெளிச்சத்தை நோக்கி.pdf/157

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சு.சமுத்திரம் 155

மையத்தில் ஒளிக்கதிர்களைப் போல் ,ஒரு வித 'மூவ்மெண்டைக்' காட்டும், சரஞ்சரமான நுண்ணிய கோட்டுக் கற்றைகளையும் பார்த்தான். அந்த அறையில், இவை தவிர, வேறு எதுவும் இல்லை. கிழக்குப் பக்கமாக இருந்த ஜன்னலுக்கு திரைச்சீலைபோல், மாமரங்களும், பூச்செடிகளும் இழைதழைகளோடு மறைப்பாகவும், மறைபொருளாகவும் மின்ன, ஒய்யாரமான காற்று ஒயிலுடன் வீசியது.

ரகுராமன், அவனிடம் படுக்கையைச் சுட்டிக் காட்டினார். மேல் நோக்கி நிமிர்ந்து, படிப்படியாய், சரிந்திருந்த படுக்கை, தூய்மையான வெண்துணி விரித்த படுக்கை, மெய்யப்பன் அதில்போய் படுத்துக் கொண்டான். சின்ன வயதில் தோரண மலையில், சுகபோகக் காற்றில், மலைச்சரிவில் சரிந்து படுத்த நினைவு வந்தது. ரகுராமன் எங்கே இருக்கிறார் என்று தெரியவில்லை. அவர் குரல் மட்டும் கேட்டது. தனது இதயத்தில் இருந்தே ஒலிப்பது போல - தன் தலைக்குள்ளிருந்து பேசுவதுபோல்.

"மிஸ்டர் மெய்யப்பன்! உடம்பை தளர்த்துங்க சாயாதிங்க. அப்படியே மல்லாந்து படுங்க. கைகால்களை தளர்த்துங்க... ரிலாக்ஸ்... மை ஃபிரண்ட்.... ரிலாக்ஸ்... ஆகாயத்தில் உடம்பு மிதப்பது மாதிரி நினையுங்க... அதோ எதிரில் தெரிகிற வட்டத்தைப் பாருங்க... நுண்ணிய கதிர்கோடுகளைப் பாருங்க... அதுதான் உயிரியக்கம்... அப்புறம் வட்டத்திற்கு மத்தியில் இருக்கும் புள்ளி மட்டும் பாருங்க... இப்போ அந்தப் புள்ளி மட்டுமே தெரியணும். வேற எதுவும் தெரியப்படாது.... புள்ளி மட்டுந்தானே தெரியுது? குட்.... இப்போ ஒலிக்கிற இந்தக் குரல் தவிர, வேறு எந்தக் குரலும் கேட்கக்கூடாது; கேட்காது. சரிதானே... குட்...‌. இப்போ... நான் பத்துவரைக்கும் எண்ணுவேன். எண்ணி முடிப்பதற்குள், உங்கள் கண்கள் மூடும். பேரமைதியான உணர்வு வரும். பாதி மயக்க நிலையில் இருப்பிங்க... ஓகே... ஒன்... டூ...திரி...போர்... பை... சிக்ஸ்..."