பக்கம்:வெளிச்சத்தை நோக்கி.pdf/161

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சு. சமுத்திரம்

159



"அழாமல் சொல்லுப்பா..."

"அவளும் சிரிக்காள். விழுந்து விழுந்து சிரிக்காள். காமாட்சி! நீயுமா சிரிக்கிறே... அதுவும்... எதையோ பார்த்துக் கிட்டு நிற்கிற மல்லிகாவோட தலையைத் திருப்பி... என்னைப் பார்க்க வைச்சுட்டு, நீயுமா சிரிக்கிறே... காலமெல்லாம் நீ என் அருகே இருப்பேன்னு நினைச்சேன்.... என் ஏழ்மை நிலைக்காக, தினமும் நீ வீட்ல அழுதுட்டு அழுத கண்ணோடு பள்ளிக்கூடம் வாரேன்னு நினைச்சேன். ..கடைசியில், நீயுமா... நீயுமா? ஒனக்காக, உன் பரிதாபத்தைப் பெறுவதற்காகவாவது... ஏழ்மையில் இருக்கணுமுன்னு நினைத்த என்னைப் பார்த்தா சிரிக்கே..."

"போதும் மெய்யப்பா... இப்போ ஒனக்கு பன்னிரண்டு வயது... உள்ளூர் பள்ளிக்கூடத்துல ஏழாவது படிக்கிறே. சடுகுடு விளையாடுறே... வகுப்புல முதல்ல வாரே... வயலுக்குப் போறே... ஏதாவது, கஷ்டமான அனுபவம் ஏற்பட்டுதா... சொல்லுடா கண்ணு..."

"சடுகுடு விளையாடுகிறேன்... பண்ணையார் மகன் பரமசிவத்தை, அலாக்கா தூக்கி, கோட்டுக்கு அந்தப் பக்கமாய் கொண்டு வாறேன்... அவன் கோபத்துல என்னை அடிக்கான்... கையைப் பிடித்து திருவுறான்... 'டேய் விடுடா... கைவலிக்குது... அப்புறம் வயலுல வேலை பார்க்க முடியாது'ன்னு சொல்றேன். அவன் கேட்கல. முதுகிலயும்... மூக்கிலயுமாய் மாறி மாறி குத்துறான். என் மூக்குல ரத்தம் வருது... பொறுத்துக்கிறேன்... ஆனால், என்கிட்ட இருக்கிற ஒரே சட்டையைக் கிழிக்கிறான். ஆத்திரம் வருது... அவனை மல்லாக்கத் தள்ளுறேன்... அடிக்க மனசு வரல.. தள்ளிப் போய் நிக்கேன். அவன் அம்மா, வாராள். 'என் மகனை எப்டிடா, அடிக்கலாமுன்னு சொல்லி, என் தலைமுடியைப் பிடித்து இழுக்கிறாள்.. முகத்துலயும்.. வயித்துலயுமாய் அடிக்கிறாள்...அப்போ என் பாட்டி வயலுல இருந்து வாராள்... பாட்டி, பண்ணையார் பொம்பிளையை திட்டுவாள்னு நினைச்சேன். பாட்டிகிட்ட பண்ணையாரம்மா ஏதோ சொல்றாள். பாட்டி அதுவரைக்கும் அடிபடாத, என் கழுத்துல மாறி மாறிக்