பக்கம்:வெளிச்சத்தை நோக்கி.pdf/164

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

162

வெளிச்சத்தை நோக்கி...

செல்லமாகச் சிரித்துக் கொண்டான். ரகுராமன் வெற்றியின் நுழைவாசலுக்குள் நுழைந்தவர்போல் பேசினார்.

"என்ன யோசிக்கிறீங்க மிஸ்டர் மெய்யப்பன்? என்னடா இது... கொஞ்ச நேரத்துக்கு முன்னால.. இப்படி இருந்தோம். இப்போ எப்படி இருக்கோமுன்னு நினைக்கிங்களா...? குட் பழைய பாதையை திரும்பிப் பாருங்க... ஆனால், அதுல நடக்காதீங்க... நான் ஒன்றும் பிரமாதமாய் எதுவும் செய்யல.. உங்கள் மன சக்தியை,உங்களுக்கு ஆதரவாய் ஆக்கினேன்... அவ்வளவுதான்."

"ஒரு மனிதனுடைய மூளையில், ஒவ்வொரு அணுவும்... சுமார் இரண்டு இலட்சம் தாக்கங்களை, உள்வாங்கக் கூடியது... ஒரு மனிதனுக்கு, ஐம்பது வயதிற்குள், அவன் மூளையில் சுமார் 287 கோடி தாக்கங்கள் ஏற்படுகின்றன. இது சராசரி கணக்கு... உங்களுக்கு வயது இப்போ இருபத்தாறு. உங்கள் அனுபவத்தை கணக்கெடுத்துப் பார்த்தால், கிட்டத்தட்ட 200 கோடி தாக்கங்கள் - அதுதான் இம்பிரஸன்ஸ் உங்களுக்கு ஏற்பட்டிருக்கும். இந்த தாக்கங்களுக்கு இடையே, தர்க்கங்கள் ஏற்பட்டால் என்னாகும்? நினைத்துப் பார்க்க முடியுமா? மனோ சக்திக்கு மிஞ்சின சக்தி எதுவும் இல்லை. மனோ வேகத்துக்கு ஈடான வேகம் எதுவும் இல்ல. பார்த்த பொருளையோ... ஊரையோ... நாட்டையோ, ஒரு வினாடியில் ஐந்தில் ஒரு பங்கு நேரத்தில், மனதுக்குக் கொண்டு வரக்கூடியது மனோவேகம். அடிமன சக்தியை... சரியாய் பயன்படுத்தினால், பாரதி சொன்னது மாதிரி, காற்றில் ஏறி, விண்ணையும் சாடலாம்..."

"ஆனால், நீங்க, கஷ்டப்பட்டு, கஷ்டப்பட்டு, கஷ்டத்தையே ரசனையாய் அனுபவிக்கத் துவங்கிட்டீங்க... நீங்கதான் உலகத்திலேயே அதிகமாய் கஷ்டப்படுகிறது மாதிரி ஒரு நெனப்பு... இது தப்பான எண்ணம்... எல்லோருக்குமே கஷ்டம் இருக்கு... பிளாட்பார ஜனங்க படுற கஷ்டத்தை விடவா நம்ம கஷ்டம் பெரிசு? அதனால... கஷ்டம் வந்தால், அதை அனுபவிக்க துணியுங்க... அதன் காரண காரியத்தை கண்டுபிடித்துப் போராடுங்க... ஆனால், கஷ்டப்படுறோமேன்னு மட்டும் நினைக்காதிங்க...