பக்கம்:வெளிச்சத்தை நோக்கி.pdf/165

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

க. சமுத்திரம்

163

கஷ்டத்தைவிட மோசமானது, கஷ்டப்படுறோமே என்கிற எண்ணந்தான்...”

"ஓ.கே. இந்தாங்க டிரான்குலைஸர் மாத்திரைங்க... தினமும் மூன்று வேளை சாப்பிடுங்க... இது ஒரு யோகாசன நூல்... சுவாமி சிவானந்தா எழுதியது. இதைப் படித்துவிட்டு, உருப் படியான யோகாசன பயிற்சிக்கூடத்துல சேரப்பாருங்க... நிமிர்ந்து உட்கார்ந்து மூக்கின் துனியைப் பாருங்க... புருவத்தைப் பாருங்க... நல்ல புத்தகங்களைப் படியுங்க... இரவில் படுக்கும்போது, மனம், நான் சொன்னபடி கேட்கும்; அது சொன்னபடி நான் கேட்கமாட்டேன். நாசகரமான எண்ணங்களை விரட்டி விட்டேன்' என்று பல தடவை, உள்ளுக்குள்ளேயே சொல்லுங்க... எல்லாவற்றிற்கும் மேலாக இந்த தாடி மீசையை எடுத்திடுங்க... இதுவே, பாதிப் பைத்தியத்தைக் கொடுக்கும். ஓ.கே. புறப்படுங்க..."

மெய்யப்பனும் குமாரும், வாசலைப் பார்க்காமல், ரகுராமனின் வாயையே பார்த்தார்கள்.


21

தாடி, மீசை இல்லாமல் காட்சி அளித்த மெய்யப்பனைப் பார்த்து, சத்யா முதலில் அதிர்ச்சியடைந்தவள்போல், வண்டிக்காரர் கொண்டு வந்த காய்கறிகளைப் புரட்டிக் கொண்டே, அவனைப் பார்த்தாள். அவன், அவளைப் பார்த்துச் சிரித்தபோது, பைத்தியம் முற்றிவிட்டதோ என்பது மாதிரி கூடப் பார்த்துக் கொண்டாள். அவன், சுற்றுமுற்றும் பார்த்துவிட்டு, ஆகாயத்தைப் பார்த்துக் கும்பிட்டபோது, அவள் ஆனந்தப் பரவசமானாள். காய்கறிகளைப் பொறுக்காமல் துழாவிக் கொண்டிருந்தவளைப் பார்த்த காய்கறி வியாபாரி, "காற்றுல ஆடி, மரத்துல மோதுனதால... இந்தக் காய்... காஞ்சு போனது மாதிரி தெரியுதும்மா... ஆனால், காஞ்சது இல்ல... இதுதான் இருக்கிற காயை விட