பக்கம்:வெளிச்சத்தை நோக்கி.pdf/166

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

164

வெளிச்சத்தை நோக்கி...

நல்லகாய்...” என்று சொல்லி, அவளை சுயநிலைக்குக் கொண்டு வந்தார்.

காலம் ஒரு மாதமாக உருண்டோடின. மெய்யப்பனுக்கு ஏழெட்டு 'செஷன்களை' ரகுராமன் நடத்தி விட்டார். அவனது ஒவ்வொரு பழைய உணர்வையும், அக்குவேறு ஆணி வேறாக்கி, அவனையே பார்க்கச் செய்தார். இப்போது, அவனுக்கு உள்ளத்தின் வீக்கம் குறைந்து தெரிந்தது. ஆரம்ப காலத்தில் ரகுராமன் கொடுத்த' டிரான்குலைசர்' மாத்திரைகளை அதிகமாகச் சாப்பிட்டான். பழைய நினைவுகள் தலையைக் காட்டினாலும், அவை கால் பதிக்க வில்லை. மாத்திரைகள் அவன் மனதைக் கட்டிப் போட்டன... அவனே 'நாமா... இப்படியெல்லாம் நடந்தோம்...' என்று நினைக்குமளவிற்கு, அவன் மனமே, இயங்காத சக்கரம்போல், நிர்மலமாக இருந்தது. சில சமயம், சிந்திக்கும் சக்தியை இழந்த அப்பாவி மாதிரியும் ஆக்கியது. சிந்தனா சக்தியை இழந்த அப்பாவி மாதிரியும் ஆக்கியது. சிந்தனா சக்தி போகப் போக, யந்திரமயமாகிக் கொண்டிருந்தது.

அவனை டிஸ்மிஸ் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப் படுவதாகச் செய்தி வந்தபோதுகூட, அது அவன் மனதைப் பாதிக்கவில்லை. சத்யா, அவனைக் கருணை ததும்பப் பார்க்கும்போதுகூட, அது அவன் உள்ளத்தைப் பாதிக்க வில்லை. மனம் நெகிழ வேண்டிய அளவுக்கு நெகிழ வில்லை. உடனே அவனுக்கு அது தப்பாய் தெரிந்தது. மாத்திரை சாப்பிடுவதை நிறுத்தினான். பாதாளமும், பாய்லர் அடுப்பும், சொறிநாயும், வந்து வந்து போயின. அந்த நினைப்புக்கள் பதட்டத்தைக் கொடுக்கவில்லையானாலும் தொல்லை கொடுத்தன. டாக்டர். ரகுராமனின் ஆலோசனைப் படி, மாத்திரைகளின் எண்ணிக்கையைக் குறைத்துக் கொண்டான். இறுதியில் எப்போதாவது தேவைப்படும் போது மட்டும் பயன்படுத்தினான்.

ஆசனப் பயிற்சிக் கூடத்தில் சேர்ந்து, மயூராசனம், புஜங்காசனம், தனுராசனம், சர்வாங்காசனம், சவாசனம் முதலிய எளிய ஆசனப் பயிற்சிகளைக் கற்றுக் கொண்டான்.