பக்கம்:வெளிச்சத்தை நோக்கி.pdf/17

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சு.சமுத்திரம் 15


மெய்யப்பன் வெறுப்போடு பேசியதைக் கேட்ட குமார், அவனை ஆச்சரியமாகப் பார்த்தான். பாட்டி மீது இவ்வளவு வெறுப்பா?...

“எப்படியோ போ... பத்தாயிரம் ரூபாய் வரைக்கும் சொத்துத் தேறுமுன்னு சொன்னியே... என்ன பண்ணுனே..."

"சித்தப்பா கேட்டார்..கொடுத்துட்டேன்..."

"ஒனக்கு அறிவிருக்காடா..."

"நீ ஒருத்தன்... இப்போ அந்தப் பத்தாயிரம் ரூபாய் வந்து என்ன ஆயிடப் போவுது... எனக்கு என்ன... தங்கச்சி இருக்காளா... அண்ணன் தம்பி உண்டா... எங்க பாட்டி, எங்க அம்மாவை என்னவெல்லாமோ பண்ணினாள்... என்னைப் பாடாய்ப் படுத்தினாள்... இப்போ என்னத்தைக் கொண்டு போனாள்...? அவள் சேர்த்த சொத்து எனக்கு வரப்படாது... அவள் சொத்துல ஒரு துரும்பு என் சட்டையில் விழுந்தால்... அதை என் சட்டையோடு சேர்த்து எரிப்பேன்... விவரித்தால் மகாபாரதம் மாதிரி நீளும்... விட்டுத் தள்ளு... விமலா ஏன் இன்னைக்கு வரல?...."

"நீ ஒரு மடையண்டா... இப்போ பதினைந்து நாளாய் எவனோ ஒருவன்கூட சுத்திக்கிட்டு இருக்காளாம்... வித விதமான ஸ்கூட்டர்லயும், மோட்டார் பைக்கிலயுமாய்... இது சீக்கிரம் விதவிதமான மனுஷங்ககூடயும் சுத்துறக்கு ஆரம்பிப்பாள் என்கிறதுக்கு அறிகுறி."

மெய்யப்பன், ஒரு கணம் திடுக்கிட்டு, மறுகணம் கத்தினான். "டேய் குமார்... அவளுக்கும் எனக்கும் இருக்கிற நெருக்கம் ஒனக்குத் தெரியும்... அபாண்டமாய் பேசப்படாது. நீ கண்ணாலப் பார்த்தியா?..." பாஷ்யம் பார்த்ததாய் சொன்னார்..."

'அவன் அசல் சனீஸ்வரன்... ஆகாசப் புலுகன்... வயிற்றெரிச்சல் மனுஷன்."