பக்கம்:வெளிச்சத்தை நோக்கி.pdf/174

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

172

வெளிச்சத்தை நோக்கி...

 போகுது. மழை பலமாய் பெய்யுது... ஈயப் போணிக் கிழவி, பஸ் ஸ்டாண்டுக்குள்ள வந்து, தூணைக் கட்டிப் பிடிச்சுக்கிட்டே, தூக்கப் பார்க்காள். நொண்டிக் கிழவர் ஒருத்தர், கம்பை ஊன்றி நடக்கிறார். கம்பு, ஈரத்துல நழுவுது. கீழே விழுகிறார்... தூக்கிவிட ஆளில்ல..."

"சரி இந்த இந்நாட்டு மன்னர்களைப் பார்த்துட்டே... யாருக்காவது உதவி பண்ணணுமுன்னு தோணுதா..."

"தோணல... சத்யா நினைப்பில் எதுவும் தெரியல..."

"சத்யாவைவிட, ஜனசமுத்திரம் வலுவானது. கீழே விழுந்த கிழவருக்கும், கிழவிக்கும் இதோ உதவுறிங்க.."

"கிழவரை தூக்கிவிடுறேன்... ஆயாவை அணைச்சபடி, டீக்கடையில போய் டீ வாங்கிக் கொடுக்கேன்..."

"குட்... பாய்லர் தெரியுதா..?"

"தெரியுது..."

"தலை பாய்லருக்குள்ள திணிக்கப்படுறது மாதிரி தெரியுதா..?"

"இல்லை..."

"சரி. இப்போ. நான் பத்தில் இருந்து ஒன்று வரை எண்ணுவேன். எண்ணி முடிப்பதற்குள் எழுந்திருங்க. பத்து... ஒன்பது... எட்டு... ஏழு..."

மெய்யப்பன் விழித்த கண்ணோடு எழுந்தான். அவனுக்கு, ஆகாயத்தில் பறக்க முடியும் என்பதுபோல், உடல் மயிலிறகானது.உள்ளம் ஆனந்த மயமானதாய், ஆனந்தமே உள்ளமாய் மாறியதுபோன்ற பரவசம். இதற்குள், அங்கே வந்த குமார், "மடையா... எனக்காகக் கொஞ்ச நேரம் காத்திருக்கப் படாதாடா.." என்று சொன்னவன், தன்னையே புன்னகை செய்தபடி உற்றுக் கவனிக்கும் ரகுராமனைப் பார்த்துவிட்டு, “ஸாரி ஸார்... சகவாசதோசம்..." என்றான். உடனே அவனைப் பார்த்துச் சிரித்த ரகுராமன், இப்போது சீரியஸாகப் பேசினார்.