பக்கம்:வெளிச்சத்தை நோக்கி.pdf/175

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சு. சமுத்திரம்

173



"மிஸ்டர் மெய்யப்பன், இப்போதைக்கு இதுதான் கடைசி செஷன். இனிமேல் பழைய உணர்வுகள் வந்தால்... வராது... அப்படி வந்தால் மட்டும்... வாங்கோ... இப்போ நான் சொல்றதை தயவுசெய்து.. கவனமாய் கேளுங்க..."

"மனம் ஸ்தூலமானது. இதை தத்துவார்த்தமாகவும், சமயரீதியாகவும், ரசாயன விதியின்படியும், பிரபஞ்ச சேர்க்கைப்படியும், சமூக அமைப்புப்படியும் பலர் தத்தம் பார்வையில் விளக்கியிருக்காங்க... நம் முன்னோர்கள் மனப்போக்கையும், அதை அடக்குவதில் உள்ள சிரமத்தையும் உணர்ந்துதான் மனமாயைன்னு சொன்னாங்க, 'மனமென்ற மாயப் பிசாசு'ன்னு பாடியிருக்காங்க. இதேபோல், பிளேட்டோ, பிரான்ஸிஸ் பேகன், ஹென்றி பெர்க்ஸன், லோட்ஸே, பெட்ராண்ட் ரஸ்ஸல், கிளார்க்ஸ் மாக்பெல், கார்ல் மார்க்ஸ் போன்ற தத்துவவாதிகளும், மனதை பல்வேறு வகையில் விளக்கியிருக்காங்க. எட்மண்ட் பிராய்ட், பாலுணர்வு அடிப்படையில், கனவுகளை மாறுவேட எண்ணங்கள் என்று சொல்லியிருக்கார். இது பிரமைகளுக்கு பொருந்தும். ஆனால் ஒன்று. அடிமனம், வெளிமனதைவிட, வல்லமை வாய்ந்தது. நுட்பமானது. வெளிமனம் இந்த தரை என்றால், அடிமனம் இந்தத் தரைக்குக் கீழே இருக்கும்... கல், பாறை தண்ணீர், தாதுப் பொருட்கள், எரிக்குழம்பு முதலியன வைத்திருக்கின்ற அதல பாதாளம் மாதிரி... அது நடராஜர் நடனம் மாதிரி. ஆனந்த நடனமும் ஆடும். ஊழிக் கூத்தும் போடும். மொத்தத்தில் உடல் ரயில்பெட்டி என்றால், மனம் என்ஜின்.”

"உங்களுக்கு சின்ன வயதிலேயே அம்மா இறந்ததால் ஏற்பட்ட பாதுகாப்பின்மை உணர்வு... அடிமனதில் தேங்கிட்டு... ஒவ்வொரு கட்டத்திலயும், தாய்மையைத் தேடுபோது, சம்பந்தப்பட்ட பெண்கள், உங்களை நிராகரித்திருக்காங்க... இது பாதுகாப்பின்மை உணர்வை பெருக்கிட்டு... சின்ன வயதிலிருந்தே... உங்கள் திறமைக்கு அங்கீகாரம் கிடைக்கல... இது ஒரு பெர்ஸீ குஸன் காம்ப்ளெக்ஸா மாறி, சும்மா இருந்த அடிமனதை ஊதிக்கெடுத்துட்டு..."