பக்கம்:வெளிச்சத்தை நோக்கி.pdf/178

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

176

வெளிச்சத்தை நோக்கி...


செய்துட்டிங்க? வ.உ.சி.யிடம் வாங்கித் தின்றவர்களே, அவர் சிறையில் இருந்து திரும்பும்போது எதிர்கொண்டு அழைக்கவில்லை என்பது தெரியுமா?"

"இதே அறிவுரை, இலக்கியத்திற்கும் பொருந்தும். எழுதுங்க... எழுதிக் கொண்டே இருங்க... ஒன்றுமட்டும் நிச்சயம். திறமையை, தாமதப் படுத்தமுடியுமே தவிர தடுக்கமுடியாது. மாதவையாவையும், புதுமைப்பித்தனையும், அழகிரிசாமியையும், விந்தனையும் மறைக்கப் பார்த்தாங்க... முடிந்ததா? இவங்க சாகாமல் செத்த காலத்தில், ஓஹோன்னு வாழ்ந்த எழுத்தாளர்கள் பேர் இப்போ செத்திட்டு... ஆனால், இவங்க, இப்போ மட்டுமல்ல... எப்பவும் வாழ்வாங்க... அதனால, எழுதுவதை விசுவாசமாய் எழுதுங்க... எழுத்தை சத்தியமாய் உபாசியுங்க... அது வீணாகாது... இந்த வர்த்தகச் கலாச்சாரம் போய்... நியாயமான பாட்டாளிக் கலாச்சாரம் வரும்போது... நீங்க எழுதுறது சத்தியமானால்... அது நிற்கும்...”

"அதனால, உங்களைச் சுற்றியுள்ள ஜன சங்கிலியில் உங்களை இணைத்துக் கொள்ளுங்கள். ஒவ்வொரு உயிரும் ஒரு அற்புதம். ஒவ்வொரு அற்புதமும், ஒரு லட்சியத்தைக் கொண்டதுன்னு நினையுங்க... எந்த சமூகத் தட்டில் இருந்து வந்தீங்களோ.. அந்தத் தட்டில் உள்ள அடிப்படை மக்களுக்காக, ஏதாவது ஒட்டு மொத்தமான சேவை செய்யுங்க... பிளாட்பாரத்து ஜனங்களைப் பார்க்கும்போது, உதவி செய்ய முடியாவிட்டாலும், குறைந்தபட்சம் அவங்க நிலைமையை, ஒரு நிமிடமாவது நின்று கவனியுங்க, பிறர் பாராட்டணுமுன்னு சேவை செய்வதைவிட, கொடுமை செய்வது எவ்வளவோ மேல். சேவைக்காக சேவை செய்யுங்க... இது, உங்களுக்கும், சமூகத்திற்கும் உள்ள உறவைப் பலப்படுத்தும். வீட்டை, சமூகமாய் நினைக்காமல், சமூகத்தையே வீடாய் நினையுங்க... சமுதாயக் கடலில் ஒரு துளியாய் மாறுங்க... இதனால், நீங்க தனித்தனியாய் ஆகாமல், வெள்ளமாய் இயங்கமுடியும். நீங்க சராசரிக்கு மேலான இளைஞர் சிந்தனையை, தனிமனித அடிப்படையில் வளர்க்காமல், சமூகச் சிந்தனையை விரிவாக்குங்க..."