பக்கம்:வெளிச்சத்தை நோக்கி.pdf/179

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சு. சமுத்திரம்

177



"மனம், சூன்யத்தில் நிற்காது. அதனால, ஆரோக்கியமான உணர்வுகளை நினைத்துப் பார்க்கணும். மகாத்மா காந்தியின் போதனைகளையும், கார்ல் மார்க்ஸ் தத்துவத்தையும் படிக்கப் படிக்க, புதியதோர் உலகத்தைப் பார்ப்பிங்க... ஏன் அப்படிப் பார் க் கி ங் க ....? மெ த் த ப் ப டி ச் ச வ ன் சு த் த ப் பயித்தியமாச்சேன்னா..? பரவாயில்ல... படிக்காமல், அசுத்தப் பயித்தியக்காரனாய் இருக்கதைவிட, சுத்தப் பைத்தியம் நல்லது."

"கடைசியா ஒண்ணு... எதற்குப் பயப்பட்டாலும், இந்தப் பயத்திற்கு மட்டும் பயப்படக்கூடாது..."

ரகுராமன், பேசி முடித்தவர்போல், அவர்களைப் பார்த்துவிட்டு, சுற்றும் முற்றும் பார்த்தார். மெய்யப்பனும் குமாரும் அவரையே பார்த்தார்கள். குமாருக்கு, தனக்கும் அவர் சிகிச்சை அளித்தது போன்ற உணர்வு. அவர்களுக்கு எப்படி எழுந்திருப்பது என்ற மயக்கம். ரகுராமனுக்கு, எப்படி அனுப்புவது என்ற தயக்கம். சிறிதுநேர மெளனம். பிறகு, டாக்டர் ரகுராமனே, இருக்கையில் சிறிது சாய்ந்து, 'ரமா...' என்று, அங்கே இல்லாத மனைவியைக் கூப்பிட்டார்.

மெய்யப்பனும் குமாரும் எழுந்தார்கள். நன்றி சொல்ல நெஞ்சிருந்தாலும், வார்த்தைகள் கிடைக்கவில்லை. மெய்யப்பன், 'ஸார்...' என்றான். அதைப் புரிந்து கொண்ட ரகுராமன், "இந்த சமூகம் கொடுத்த வரிப்பணத்தில், படித்த ஏழை நான். நீங்கள் நன்றி சொல்ல வேண்டியது இந்த சமூகத்திற்குத்தான்..." என்றார்.

சமூகத்தை அடையாளம் கண்ட மகிழ்ச்சியில், அதில் இரண்டறக் கலக்கப்போவது போல, மெய்யப்பன், குமாருடன் கலக்கமில்லாமல் நடந்தான்.