பக்கம்:வெளிச்சத்தை நோக்கி.pdf/181

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சு. சமுத்திரம்

179



கடந்தகால அனுபவத்தைக் கடந்து, அந்த அனுபவத்தையே இன்றைய மனோதளத்திற்குப் பலமான அடித்தளமாகக் கொண்ட மெய்யப்பனால் ஒன்றே ஒன்றை மட்டும் மறக்க முடியவில்லை. மனமும் கேட்கவில்லை. சத்யாவின் அண்ணி அறையைக் காலி பண்ணச் சொன்னதைப் பேச்சுவாக்கில் குமாரிடம் சொல்லியிருந்தான். அவனும் 'அதுவும் நல்லதுதாண்டா...' என்று மட்டும் சொன்னான். திடீரென்று, அவன் குடியிருக்கும் தெருவிலேயே ஒரு அறையைப் பார்த்து, தன் சொந்தப் பையில் இருந்து மூன்றுமாத அட்வான்ஸையும் கொடுத்து விட்டானாம். மெய்யப்பன் 'சத்யா...' என்று இழுத்தபோது, "இனிமேல் ஒன்னை சத்தியமாய் உதைப்பேண்டா... அப்போ விமலான்னு விழுந்தே. இப்போதான் எழுந்திருக்கே... அதுக்குள்ள சத்யாவா.... பிச்சுப்பிடுவேன்..." என்று சொல்லிவிட்டு, அறையைக் காலி செய்ய வேண்டிய நாளையும், நிச்சயித்து விட்டான். இன்று, நிச்சயித்த நாள் வந்துவிட்டது.

அவன் காலி செய்யப்போவதை, ஒரு வாரத்திற்கு முன்பே தெரிந்து கொண்ட சத்யா , அவனைத் திரும்பிப் பார்க்கவில்லை. அவன் வெளியே வந்தால், அவள் உள்ளே போனாள். வேறு எவரும் இல்லாத சமயத்தில், அவளிடம் பேச்சுக் கொடுக்கப் பார்த்தான். அவள் வீட்டுக்குள்ளே போய்க் கதவைப் பலமாகச் சாத்திக் கொள்வாள். வெளியே காய்கறி வாங்கப்போனால், அவனோ, அவனுள்ள அறையோ இல்லாததுபோல் போவாள். இன்று, அவன் காலி செய்யப் போவதால், மனங்கேட்கவில்லையோ.. என்னவோ, அவன் கண்ணில் படும்படி மாறி மாறி நடந்தாள்... வீட்டில் யாரும் இல்லாத வேளை.

மெய்யப்பன் அறைவாசலுக்கு அருகே வந்து, 'சத்யா...' என்றான். அவள் காதில் வாங்காததுபோல் நடக்கப் பார்த்தாள். உடனே அவன், "நான் பழையபடியும் சீரழியணுமுன்னால் போ.." என்று குழந்தைக் கோபத்தோடு சொன்னபோது அவள் நின்றாள்.