பக்கம்:வெளிச்சத்தை நோக்கி.pdf/183

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சு. சமுத்திரம்

181

படிந்திருக்கும்... நீ மட்டும் அந்தப் பெரியவரை தரிசிக்க சந்தர்ப்பம் கொடுக்கலன்னா... நான் பைத்தியத்தை தரிசிச்சுக்கிட்டு இருப்பேன். எனக்கு அந்தப் பெரியவர், இந்த முருகன் எல்லாமே நீதாம்மா. நீ இல்லாமல் என்னால வாழமுடியாது. பழைய நிலைக்கு நிச்சயம் போயிடுவேன். சொல் சத்யா... ஆயிரம் ரூபாய் கொடுத்து குதிரை வாங்கிட்டு, ஆறு ரூபாய் கொடுத்து கயிறு வாங்கி, குதிரையைக் கட்டாட்டால், அது ஓடிடும்... அவ்வளவுதான் சொல்லமுடியும். அப்புறம் உன் இஷ்டம்..."

சத்யா தலைநிமிராமல் முணுமுணுத்தாள்.

"ஆறு ரூபாய் கயிறு எப்படியோ...? இந்த ஐந்து பைசா மஞ்சக் கயிறு, என்னை ஏற்கெனவே கட்டிப் போட்டுட்டு. இதை அறுக்கிறது... குதிரை ஓடுறது மாதிரி... ஒங்களுக்கு என்னைவிட, எல்லா வகையிலும் மேலானவள் தேவை. நிச்சயம் கிடைப்பாள்... உங்களை... இப்போ பார்க்கையில் ஏற்படுகிற மகிழ்ச்சி... எனக்குக் கல்யாணம் நடக்கும்போது ஏற்பட்டதைவிட அதிகம்... இருந்தாலும்... நான்... இன்னொருத்தன்..."

விலகி உட்கார்ந்திருந்த மெய்யப்பன், எழுந்து அவளருகே சென்றான்.

"என்னோடு, உனக்கு வாழ இஷ்டமில்லன்னா.. அது வேற விஷயம்... தாலி கட்டிட்டு... அப்புறம் உதறிவிட்ட ஒரு குடும்பத் துரோகிக்காக, நீ விலகி இருக்கதை, என்னால சகிக்க முடியாது... எப்போ ஒருவன், தொட்டுத் தாலி கட்டினவளை தள்ளி வச்சுட்டானோ... அந்தப் பயலுக்கு, கணவன் என்கிற அந்தஸ்து போயிட்டுது... அவன் போட்ட தாலி, தூக்குக் கயிறாய் ஆகப்படாது... என்னோட தூக்குக் கயிறை அப்புறப் படுத்தினவள் போட்டிருக்கிற தூக்குக் கயிற்றை அகற்ற எனக்கு உரிமை இல்லாமல் இருக்கலாம். ஆனால், கடமை உண்டு..."

"கற்புன்னு ஒண்ணு இருக்கே."