பக்கம்:வெளிச்சத்தை நோக்கி.pdf/185

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சு. சமுத்திரம்

183

 பார்த்தாள். அந்தக் கயிற்றை எடுக்கப் போகிறவள்போல் நடந்தாள். மெய்யப்பன் அவள் கையைப் பிடித்து, தோளை அழுத்தி, நாற்காலியில் உட்கார வைத்தான். பிறகு, "என் மனதைக் காட்டிட்டேன்... இனிமேல் அந்தத் தாலியை எடுக்கறதும், எடுக்காததும் உன் இஷ்டம். நாலு பேருக்குப் பயப்படுறே... நீ பயங்கரமாய் அடிபடும்போதோ... கட்டுனவன் தள்ளி வச்சபோதோ... நாலுபேர் கிடக்கட்டும்... ஒருத்தராவது உதவிக்கு வந்தாங்களா..? உன் விருப்பம்போல் செய்..."

அவன் விருப்பம்தான் தன் விருப்பம் என்பதுபோல், அவள் தலை கவிழ்ந்து இருந்தாள். எழாமலே இருந்தாள். அவள் உடம்பு ஆடிய ஆட்டத்தில் நாற்காலி ஆடியது. மெய்யப்பன் கிடுகிடுவென ஆடிய அவள் உடம்பை ஆதரவாகப் பிடித்தான். பிறகு, பிடியை விட்டுவிட்டு, விலகி நின்றான். அவள் அவனை நிமிர்ந்து பார்த்து, "எனக்குப் பயமாய் இருக்கு... பயமாய் இருக்கு..." என்று கிளி மாதிரி, சொன்னதையே சொல்லிக் கொண்டிருந்தாள்.

மெய்யப்பன் உறுதியோடு பேசினான். அந்தப் பேச்சில், காதலின் குழைவைவிட சமூக அநீதியைச் சாடும் போர்ப் பரணி ஒலித்தது.

"அடிக்கிறவன் அண்ணனாக மாட்டான்; கரிக்கிறவள் அண்ணியாக மாட்டாள்; பிறத்தியார் கஷ்டத்தை கண்டுக்காத மனிதர்கள் சமூக உறுப்பாக மாட்டார்கள்; சொந்தக்காரர்கள் அந்நியராய் மாறிட்டாங்க... இந்த அந்நியன், இப்போ, சொந்தமாயிட்டான்... இப்போ, குமார் வரப் போறான்.... ஒன் அண்ணன் அண்ணியோட உணர்ச்சிகளுக்கு மதிப்புக் கொடுத்து, இப்பவே குமார் வீட்டுக்குப் போகப் போறோம்... சாயங்காலம் கோவில்... ராத்திரியில் நம்ம வீடு."

"எனக்குப்... எனக்குப் பய... பயமாய்... பயமாய்...”

‘'எதுக்குப் பயப்பட்டாலும், பயத்துக்கு மட்டும் பயப்படக்கூடாது சத்யா. நான் சொன்னதை திருப்பிச்