பக்கம்:வெளிச்சத்தை நோக்கி.pdf/19

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

2

 காலம் பதில் சொல்லத் துவங்கியது. அதுவும், குமாரின் கணிப்பில் முதல் வகுப்பில் தேற நினைத்தது போல், வேகமாக விடையெழுதத் துவங்கியது.

இரண்டு நாள் கழித்து, விமலா அலுவலகம் வந்தாள். மெய்யப்பனைப் பார்த்ததும், வாயை அகலப்படுத்தி, ஆச்சரியப்பட்டவள்போல் 'ஹலோ' என்றாள். அவ்வளவு தான். முன்பெல்லாம் இப்படி இடைவெளிவிட்டு அவனைப் பார்த்தால், அவனுடன் இடைவெளி விடாமல் உட்காருபவள் - என்கிட்ட பேசாமல் அங்கே என்ன பேச்சு... என்று கோபத்தோடு குதிப்பவள்; மெய்யப்பன், அவளை உற்றுப் பார்த்தான். அடியோடு மாறியதுபோல் தெரிந்தது.

வயிறு நன்றாக இருந்ததோ இல்லையோ, நன்றாகத் தெரிந்தது. எதையாவது பேசும்போதோ அல்லது கேட்கும் போதோ தோளைக் குலுக்கி, கைகளை மல்லாந்து விரித்து, உதட்டைப் பிதுக்கி, நெற்றியைச் சுழித்த விதம், அவள் யாரோ ஒருத்தருக்காகச் செய்து காட்டுவதை இங்கேயும் எதேச்சையாய்ச் செய்வது போலிருந்தது.

மெய்யப்பன் அவளாகத் தன்னிடம் பேசுவாள் என்று எதிர்பார்த்தான். பேசவில்லை. பேச விரும்புவது போலவும் தெரியவில்லை. ஏதோ ஒரு ரிஜிஸ்டரை எடுக்கும் சாக்கில் அந்தப் பக்கமாகப் போனவன் "என்னம்மா... டல்லா இருக்கே" என்றான். "நோ...நோ... இப்போதான் ஹேப்பியாய் இருக்கேன்" என்றாள். "பாட்டி செத்ததைக்கூட கேட்கத் தோணலியா..." என்றான். "பாட்டி செத்தால் என்ன... வேற யார் செத்தால் எனக்கென்ன...." என்றாள் வெடுக்கென்று. மெய்யப்பனின் முகம் இறுகியது. ஏதோ, தொலை தூரத்திற்குப் போகிறவன்போல் வேகமாக நடந்து, தன் இருக்கையில் அமர்ந்தான். குமார் பேச்சுக் கொடுத்துப் பார்த்தான். பேச

2