பக்கம்:வெளிச்சத்தை நோக்கி.pdf/21

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சு.சமுத்திரம் 19

வாரம் நினைத்து, இப்போது விடவே முடியாது என்பது போல் மெய்யப்பன் அவள் பார்வைக்காகத் தவித்தான். எங்கே போனாலும் அவளும் மானசீகமாக உடன் வருகிறாள். கொய்யாப்பழம் மாதிரி அழகான திட்டுப் புள்ளிகள் கொண்ட அவள் முகமும், இன்ன நிறம் என்று சொல்ல முடியாமல் எல்லா நிறமும் கலந்து நல்ல நிறமாய் உருவானது போல் தோன்றிய உடல் தோற்றமும் அவனை உருக்குலைய வைத்தன.

அன்றைக்கும் அப்படித்தான்.

மானேஜர் அறைக்கு எதிரே சுவரில் சாத்தி வைத்திருப்பதுபோல் போட்டிருந்த நாற்காலியில் சாய்ந்திருந்த மெய்யப்பன், எதையுமே கவனிக்காதவன் போலவும், எல்லாவற்றையும் கவனிக்கிறவன் போலவும் கூரை மேட்டைப் பார்த்தான். தரையை நோக்கியும் கண்களைச் சுழற்றிக் கொண்டிருந்தான். மானேஜர் அறை வாசலை அடைத்து நின்ற வண்ண வண்ண டிசைன்கள் போட்ட திரைச் சீலையோ, அந்த அலுவலகம் கொட்டக் கொட்ட விழித்துக் கொண்டிருப்பதுபோல் ஏதோ ஒரு கோளாறால் விட்டுவிட்டு எரிந்து கண்களைப் பறித்த ஒரு டியூப் லைட்டோ, வாணி உள்ளே போனதோ, எதுவும் அவன் கண்களை ஊடுருவவில்லை. கேட்டவை எல்லாம் வெறும் ஒலிகளாகக் கேட்டனவே தவிர, அவை மூளையில் பதிந்து பொருள் வடிவங்களாகவில்லை.

அவன் அங்கே இல்லை என்பது மாதிரி அல்லது அவன் ஒரு பொருட்டே இல்லை என்பதுபோல், இடது கையில் இருந்த வட்டக் கண்ணாடியை மேஜையின் ஊன்றி, தொப்புளுக்குக் கீழே புடவையை இழுத்துவிட்டு, உடம்பை நளினமாகச் சாய்த்து, மாராப்பு சேலையை அது இருக்க வேண்டிய இடத்தில் வைக்காமல், தோள் பக்கமாக ஒதுக்கிக் கொண்டிருந்த விமலாவையே, அவன் வெறித்துப் பார்த்தான்.

மெய்யப்பன், தன் மோவாயைத் தடவி விட்டுக் கொண்டான். குண்டூசி நீளத்திற்கு வளர்ந்திருந்த தாடி