பக்கம்:வெளிச்சத்தை நோக்கி.pdf/23

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சு.சமுத்திரம் 21


செருப்புக்களில் இருந்த கால்களை அரியாசனத்தில் உள்ள செங்கோல்களாகத் தோன்றச் செய்தது.

அவளை வைத்த கண் வைத்தபடிப் பார்த்தவன், அவளோடு கடற்கரைக்குப் போனதையும், அவள் தலையில் செல்லமாகக் குட்டியதையும், அவள் சிணுங்கியபடி நோக்கிய சிலிர்ப்பையும், பார்வையையும், குமாரை விட்டு விட்டு, இரண்டு கேரியர்களில் வரும் உணவை தங்களின் உள்ளங்களைப்போல் ஒன்றாகக் கலந்து, ஒரே இலையில் வைத்து உண்டதையும் நினைத்துக் கொண்டான். அப்படி நினைத்தபோது, தனது உணர்வுகளுக்குத் தானே உணவாகிப் போனவன்போல் உடம்பெல்லாம் குழையும்படி நாற்காலிக்குள்ளே உடம்பைச் சுருட்டினான்.

பிறகு, இன்றைக்கு எப்படியாவது அவளிடம் இரண்டில் ஒன்றைக் கேட்டு விடுவது என்று திட்டவட்டமான முடிவுக்கு வந்தவன்போல் நிமிர்ந்து உட்கார்ந்தான். எந்த வகையிலாவது பிரச்சினை தீர்ந்தால் சரிதான் என்பது போன்ற தீர்க்கம். அது சாதகமான வகையில்தான் முடியும் என்ற நம்பிக்கை. அதேசமயம், பாதகமாய்ப் போய்விடக் கூடாதே என்ற பயம். அவளே பேசாதபோது, நாம் ஏன் பேச வேண்டும் என்ற சுயமரியாதை உணர்வு. பூனையைப்போல், மனதிற்குள் குறுக்கும் நெடுக்குமாக ஓடியதால் ஏற்பட்ட நிரடல்.

ஏன் பேசக்கூடாது? மிருக இனத்தில்கூட, பெண் சிணுங்கும்போது, ஆண்தானே குழைகிறது! பார்த்தும் பாராதுபோல் பரல் கல்லைக் கொத்தும் கோழி ஓடும்போது, சேவல்தானே துரத்துகிறது! விருப்பப்படாததுபோல் ஓடி, ஒரு குறிப்பிட்ட தூரத்தில் நிற்கும் பெண் நாயைப் பார்த்து, ஆண் நாய்தானே பின் தொடர்கிறது? அப்படியானால் காதல் என்பது மிருக வகையா? இல்லை.... இல்லை...

கடற்கரையில் கைகோர்த்து, நடந்தவள், ஒரு சாக்லேட்டைப் பாதி கடித்துவிட்டு, பாதியை நாணத்தோடு நீட்டியவள், 'நான் உங்களைத்தான்-நம்பியிருக்கேன்' என்று