பக்கம்:வெளிச்சத்தை நோக்கி.pdf/25

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சு.சமுத்திரம் 23

குட்டையை எடுத்து, இடுப்பில் செருகிக் கொண்டாள். அழகாகத்தான் தென்பட்டாள். மஞ்சள் சிவப்பு நிற முகத்தில் ஒளி சிந்திய கண்கள்... டிஸ்டெம்பர் அடித்த அறையில் உள்ள இரண்டு மின்விளக்குகள் போல் பிரகாசித்தன. சப்பாமலும், உப்பாமலும் இருந்த கன்னங்கள். நீளத்துடன் கூர்மையாய் முடிந்த மூக்கு முத்தங் கொடுக்கத் தயாராய் இருப்பதுபோல் சப்புக் கொட்டும் உதடுகள். தொந்தியே இல்லாத வயிறு _ இந்த அவயவ அழகுகள், அவளுக்கு ஒருவிதப் பேரழகைக் கொடுத்துக் கொண்டுதான் இருந்தன.

'ரன்வேயில்' ஓட அவசியமில்லாமல் நேராக மேல் நோக்கிப் பாயும் ஒருவித பம்பர் விமானம்போல், விமலா, நாற்காலியையோ, மேஜையையோ ஆதாரமாகப் பற்றாமல் எழுந்தாள். திடீரென்று காலில் என்ன பட்டதோ தெரிய வில்லை. மீண்டும் நாற்காலியில் உட்கார்ந்து, செருப்புக்களை கழட்டியபோது, அவள் அழகை, தன்னை மீறி ரசித்த மெய்யப்பன், அவளிடம் பேசப் போனான். அதற்குள், வெளியே போயிருந்த குமார், மெதுவாக உள்ளே வந்தான். வந்த வேகத்திலேயே பேசினான்.

"டேய்... மெய்யப்பா... எல்லாருக்கும் ஒரு நேரம்... ஒனக்கு மட்டும் வேற நேரண்டா... புறப்படுடா... ஆபீஸ் டயம் முடிஞ்சது தெரியல..."

மெய்யப்பனுக்கு அவனைப் பார்க்க வெறுப்பாகத் தெரிந்தது. தன்னையே கொடுப்பது போலப் பழகிய ஒரு தோழன்மீது - இன்ப துன்பங்கள் அனைத்திலும் பங்கு கொள்ளும் ஒரு இனிய நண்பன்மீது ஏன் தனக்கு இப்படி வெறுப்பு வருகிறது என்று உள்ளூர விசனப்பட்டு, தன்மீதே வெறுப்புக் கொண்டான். காதலின் சக்தி என்பது இது தானோ... ஒருத்தியை விரும்புவதால், உயிர் நண்பனையே வெறுக்கும் நிலை வரும் என்றால், அந்தக் காதல் தேவைதானா... இவ்வளவுக்கும், இவனிடம் உணர்வுகளைப் பரிமாறிக் கொண்ட அளவு, அவளிடம் பறிமாறிக் கொள்ள வில்லை. கடந்த ஓராண்டு காலமாக நண்பனிடம் முன்னர்