பக்கம்:வெளிச்சத்தை நோக்கி.pdf/26

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

24 வெளிச்சத்தை நோக்கி...

காட்டிய அன்பை, தான் காட்டவில்லை என்பதையும், ஆனால் குமாரோ பாசத்தைக் கொடுத்துக் காட்டினானே தவிர, வாங்கிப் பார்க்க நினைத்ததே இல்லை என்பதையும் நினைத்தபோது, மெய்யப்பனுக்கு விமலாமீது திடீரென்று ஆத்திரம் வந்தது. எப்படி இருந்த என்னை... எப்படி ஆக்கிவிட்டாள்?

மெய்யப்பன், குழம்பிக் கூழானபோது, குமார் அதட்டினான். "டேய்... ஆபீஸ் டயம் முடிஞ்சுடுத்துடா..." மெய்யப்பன் அவனைப் பார்க்காமலே பதில் சொன்னான்:

"ஆனால் என் டயம் முடியல..."

“என்னடா உளறுற...? டேய், என்னைப் பார்த்துப் பேசுடா உளறாமல் பேசுடா..."

"என்ன பண்றது... உண்மையைச் சோதிக்கிறவங்க... உறுதியாய் இருக்காங்க... இதனால... உண்மையாய் சோதிக்கப்படுறவங்க, உளற வேண்டியதாப் போச்சு.‌.."

குமார், விமலாவை நோட்டமாகப் பார்த்தான். அவள் அலட்டிக்கவில்லை. அவனுக்கு ஆகாத ஒருத்தி மீது, மெய்யப்பன், தான் என்ன சொல்லியும் இன்னும் உடும்புத் தனமான நினைப்போடு இருப்பதில் ஆத்திரம் ஏற்பட்டு, குமார் அமைதி கலைத்துப் பேசினான்.

"டேய்... இன்னைக்கி சினிமாவுக்கு ரிசர்வ் பண்ணியிருக்கோம் தெரியுமுல்லா. நீ தெரிய வேண்டிய விஷயத்தை நினைக்கமாட்டே தெரியக்கூடாததை நினைச்சுக் கிட்டு இருப்பே. புறப்படுடா, சினிமா துவங்கிவிடும்."

மெய்யப்பன் குனிந்த தலை நிமிராமலே பதிலளித்தான். "நீ சினிமாவோட துவக்கத்துக்கு அவசரப்படுறே... நான்... சினிமாவாப்போன ஒரு விவகாரத்தோட முடிவுக்கு அவசரப் படுறேன். மொத்தத்தில் வாழ்க்கை, சினிமாவாகி, சினிமா வாழ்க்கையாகி, எல்லாமே அவசரமாய் போய்க்கிட்டு இருக்குது..."