பக்கம்:வெளிச்சத்தை நோக்கி.pdf/35

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சு.சமுத்திரம் 33


"அடேயப்பா... தத்துவம் பேசுறியே. யார் சொல்லிக் கொடுத்தது?"

"அப்படின்னா எனக்கு சுய புத்தி இல்லன்னு சொல்றீங்களா?"

"நோ... நோ... ஒன் பேச்சு ரசிக்கும்படியாய் இருக்குதுன்னு சொல்ல வந்தேன். ஒன்னை மாதிரி நயத்தோட என்னால பேச முடியல..."

"நான் நயத்தோட சொல்லல... பயத்தோட சொல்றேன். நாம இவ்வளவு காலமாய், அதான்... ஒரு மாதத்துக்கும் மேலாய் அன்னியோன்னியமாய் பழகுன பிறகும், நீங்க சொல்றதை நான் தப்பா நினப்பேன்னு ஒங்களுக்கு ஒரு எண்ணம் வருது பாருங்க... அதுதான் தப்பு... இதுல இருந்து, என்ன தெரியுதுன்னால், நான் உங்களை நினைக்கிற அளவுக்கு நீங்க என்னை என்னை நினைக்கல..."

"மறந்தால்ல நினைக்கறதுக்கு."

"பரவாயில்லியே... அழகாய்த்தான் இருக்கீங்கன்னு நினைச்சேன்... அழகாயும் பேசுறீங்களே... சரி... விஷயத்தை சொல்லுங்க..."

"இப்போ வேண்டாம்... நாளைக்கு வச்சுக்கலாம்."

"ஒவ்வொருவரும் அன்றைக்குன்னு வாழனும். நீங்க சொல்லாட்டால், ஒங்களை கைவிடப்போறதில்லன்னு சொல்லமாட்டேன். நிஜமாவே ஒங்க தோள்ல என் கையை எடுக்காமல் இருப்பேன்... உம் சொல்லுங்க..."

"நான் ஸ்கூட்டரை வச்சுட்டு காத்து நின்னேனா... நீ வரலியா... உடனே ஒங்க ஆபீஸ் ஜன்னல் வழியா எட்டிப் பார்த்தேன். ஒன்கூட வேலை பார்க்கிற ஒரு குறுந்தாடிக்காரன்... கண்ணராவித்தாடி... அதைச் சரியாக்கூட அவன் படிய வைக்கல... ஒன்கிட்ட மனம்விட்டு எதையோ பேசினான்."

விமலா கலகலன்னு சிரித்தாள்.

3