பக்கம்:வெளிச்சத்தை நோக்கி.pdf/37

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சு.சமுத்திரம் 35


"ஃபாரீன் போகக்கூட சான்ஸ் உண்டுன்னு சொன்னீங்களே. அந்த வேலை..."

"ஓ! அதுவா... ஒன் மன்த் டயம் கொடு... அப்புறம் நீ... ஏர்கண்டிஷன் அறையில் இருப்பே..."

"நான் ஒண்ணும் ஏர்கண்டிஷன் அறைக்கு ஏங்கல... சீதைக்கு, ராமன் இருக்கும் இடம்தான் அயோத்தி... எனக்கு இந்தச் செல்ல ரவி இருக்கிற இடம்தான் ஏர்கண்டிஷன்..."

"அப்படின்னா... இன்னும் நெருக்கமாய் வா... ஒனக்கு எதுக்கு சிரமம்... நானே நெருங்குறேன்... நெருக்குகிறேன்..."

மெய்யப்பனால் இருக்க முடியவில்லை. அந்தக் குளிர் காற்றிலும், கடல் மண் சுடுவது போலிருந்தது. புதை மண்ணாய், அவனை கீழ் நோக்கிக் கொண்டு போவது போலிருந்தது. படகைப் பிடித்துக் கொண்டே எழுந்தான்.பார்வையே எதிரியான வேதனையில் பாய்ந்து நடந்தான். காதுகளே தேவையில்லை என்பதுபோல்,அவற்றை இரண்டு கைகளாலும் அடைத்து, கால்களால் தாவினான். ஆங்காங்கே இருட்டு உருவங்களாய் இருந்த ஜோடிகள்தான், அவனை 'வஸ்தாது'என்று நினைத்தவர்கள்போல், தத்தம் உடம்பை விலக்கிக் கொண்டார்கள். மெய்யப்பனோ விலக்க வேண்டிய நினைவை விலக்க முடியாமல், அந்த நினைவே ஒரு பேய் நினைவாக, விரைந்து கொண்டிருந்தான்.

அந்தச் சமயத்திலும், அவனுக்கு ஒரு சுகக் கற்பனை ஏற்பட்டது. 'அத்தான், இந்த ரவி என்னோட அண்ணன்... நீங்க... என்மேல் வைத்திருக்கிற காதல், எனக்கு மட்டுமல்ல... இவனுக்கும் தெரியும்... உங்களை சீண்டிவிட்டு, வேடிக்கை பார்க்க வேண்டும் என்பதற்காக இப்படி ஒரு நாடகம் போட்டோம்.நம்பி விட்டீர்களா... ஆண்புத்தி அவசரப்புத்தி என்பதைக் காட்டிவிட்டீர்களே என்று நாளைக்கு, சீ... நாளைக்கில்ல... இப்போதே ஓடி வந்து, பல் தெரியச் சிரித்து, அவன் தோளைத் தழுவிக் கொள்வதுபோல் ஒரு சுகபோக எண்ணம்.