பக்கம்:வெளிச்சத்தை நோக்கி.pdf/38

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

36 வெளிச்சத்தை நோக்கி...


அந்த எண்ணத்தைத் தடுப்பதுபோல் 'எங்களைப் பார்! நாட்டில், தேனும் பாலும் ஓடுகிறதா' என்று கேட்காமல் கேட்பதுபோல், ஒரு நொண்டிக் கிழவர், சாலையைக் கடக்க முடியாமல், ஒற்றைக் காலோடு, கையில் உள்ள கட்டையை கேள்விக்குறியாக வளைத்தது போல வைத்திருக்க, வேர்க்கடலை விற்கும் ஒரு பிஞ்சுப் பையன், அவன் ஏதாவது வாங்குவானா... என்று வினாக்குறியுடன் பார்க்க, தன்னோடு வந்த ஒருத்தியை - அவள் மனைவியோ மற்றவளோ, ஒருத்தன் கண்மண் தெரியாமல் அடிக்க, அந்த அப்பாவிப் பெண், அழுதால் இன்னும் அடிப்பானே என்பதுபோல், அழாமல் அழ -இந்த யதார்த்தத்தின் தாக்கத்தால் தாக்கப்படாமலே, அவன் தலையைப் பிடித்துக் கொண்டான்.

இந்த ரவி, அவளுடைய அண்ணன் அல்ல...அப்படி இருக்கவும் முடியாது.. அவள் குடும்பத்தைப் பற்றி அவனுக்குத் தெரியும். இவன் ஒரு தடவை அலுவலகத்திற்கு 'பர்சேஸ் ஆர்டர்' வாங்க வந்தவன். அவளை... பர்சேஸ் செய்துட்டான். தப்பு... பர்சேஸ் செய்ய வந்த பர்சேஸ்காரனை இவள் பர்சேஸ் செய்துவிட்டாள்.ஆகையால்,இது போலி நாடகமல்ல...நிஜ நாடகம் இதில் நிரந்தரக் கதாநாயகியாக இருக்கப்போவது விமலா ஒருத்திதான்... கதாநாயகர்கள் மாறிக் கொண்டிருப்பார்கள்... இன்னும் சொல்லப் போனால்,அவனைப் பொறுத்த அளவில்,ஆடவர்கள் கதாநாயகர்கள் அல்ல...

ரவியையும் விமலா உதறி விடுவாள் என்ற எண்ணம் அவனுக்கு ஒரு எதிர்மறை ஆறுதலைக் கொடுத்தது. ஒரு கணந்தான். மறுகணம், தனது கற்பனைகளும், கட்டிய எதிர்கால வாழ்வு நினைப்புகளும், ஆறுதலை நாகமாய், அவனை அச்சுறுத்த, அவன் தலைவிரி கோலமாக நடந்து கொண்டிருந்தான்.