பக்கம்:வெளிச்சத்தை நோக்கி.pdf/43

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சு.சமுத்திரம் 41


போது, விமலா டெலிபோன் குமிழில் உதட்டைக் குவித்து ஊதிவிட்டு ரீஸிவரை வைத்தாள்.

தாள முடியாத வலி மயக்கத்தைக் கொடுப்பதுபோல், மீளமுடியாத துன்பம் மெய்யப்பனுக்கு, எண்ணங்களே இல்லா யந்திர நிலையைக் கொடுத்தது. எதையோ எழுதினான். எழுதிய எதையோ அடித்தான். ஒரு ரிஜிஸ்டரை வைத்துவிட்டு இன்னொன்றை எடுத்தான். அதையும் போட்டுவிட்டு ஸ்டோர் ரூமிற்குப் போனான். அங்கிருந்து கொண்டு வந்த ஒன்றை மீண்டும் அங்கேயே கொண்டு போய் வைத்தான். பியூன் கொண்டு தந்த காபியைப் பருகுவதாக நினைத்துக் கொண்டு, இன்னொரு வெறும் டம்ளரைக் கடித்தான். சகாக்கள் அவனைப் பரிதாபமாகவும்,விமலாவைக் கோபமாகவும் பார்த்துக் கொண்டார்கள். குமாரும், சரியான மனோநிலையில் இல்லாதவன்போல், எழுந்து எழுந்து போனான்.

மாலை மயங்கி கசங்கியது. பெரும் பாலும் எல்லோரும் போய்விட்டார்கள்.

வாணி ஓசைப்படாமல் எழுந்திருக்கப் போனாள். அதற்குள் உள்ளே இருந்த மானேஜர்,"வாணி...வாணி..."என்றார். அவளால் நிற்கவும் முடியவில்லை. உட்காரவும் முடியவில்லை. "வாரேன் ஸார்” என்று சொல்லிக் கொண்டே, மேஜையில் கையூன்றி, கையில் தலை ஊறி, கண் சிவக்க உதடுகளைக் கடித்துக் கொண்டாள்.

'அலட்சியப்படுத்துபவளை அலட்சியப் படுத்து' என்று தனக்குத்தானே ஆயிரந்தடவை யோசனை சொல்லிக் கொண்டிருந்த மெய்யப்பன் எழுந்தான். விமலா போனதும் மனதில் ஏதோ ஒரு வைராக்கியம் ஏற்பட்டது. நாளையில் இருந்து அவள் அங்கே இல்லாததுபோல் நினைத்துப் பார்க்கவும் மனதை பழக்கப்படுத்திக் கொள்ளவேண்டும் என்று ஒரு உறுதி பிறந்தது. அவளிடமிருந்து, தான்தான் தப்பித்தது போலவும், அதுவும் நன்மைக்கே என்பது போலவும், வலி கொடுத்த இதயத்திற்குள் ஒரு எண்ணத்தை