பக்கம்:வெளிச்சத்தை நோக்கி.pdf/44

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

42 வெளிச்சத்தை நோக்கி...


வலிய விட்டுக் கொண்டான். அப்போதுதான் அவனுக்கு வாணி என்ற ஒருத்தி அங்கே இருப்பதும் அவள் நேற்று அழுததும், இன்று அவனோடு பேசாததும் அவனுக்குப் புலப்பட்டது.

மெள்ள அவளருகே போனான். அவளோ, இப்போது 'மெய்யப்ப' நிலையில் இருந்தாள். அருகில் போனவன், "ஐ ஆம் ஸாரி... நேற்று நீங்க அழுததைக்கூட கேட்கல... அக்கா ஒருத்தி... ஒருவனை அழ வைக்கும்போது... அந்த ஒருவன் இன்னொருத்தியோட அழுகையை கேட்க முடியாமல் போயிடுறான்... என்னை மன்னிச்சிடுங்க... என்ன அக்கா விஷயம்...?" என்று தழுதழுத்த குரலில் அவன் பேசியபோது, வாணியால் தாள முடியவில்லை... தாங்க முடியவில்லை. கரங்களால் முகத்தை மறைத்துக் கொண்டு விம்மினாள். அழுகை ஒன்றுதான் அந்தரங்கத் துணை என்பதுபோல், விரல்களெல்லாம் நீரால் நனைய அவள் விம்மி வெடித்தாள். மெய்யப்பன் அவள் கைகளை ஆதரவாகப் பிடித்து, "என்னக்கா இது... ஏன் இப்படி அழுறீங்க... அதுவும் நான் இருக்கும்போது..." என்று கம்பீரமாகப் பேசினான்.

வாணி அவனைப் பரிதாபத்துடன் பார்த்துக்கொண்டே, "இந்தக் கம்பெனில. ஆபீஸ் வேலையை மட்டுமா பாக்கச் சொல்றாங்க..? அவரு இருந்தால் எனக்கு இந்த நிலைமை வருமா." என்று சொல்லிவிட்டு, மெய்யப்பனின் விலகிய கையை பிடித்துக் கொண்டே அழுதாள்.

"என்னக்கா இது... எனக்கு நீங்க ஒரு தாய்மாதிரி. நீங்களா இப்படி ஒரு குழந்தை மாதிரி அழுகிறது. என்னக்கா விஷயம்...?சீக்கிரமாச் சொல்லுங்க... எதுவாக இருந்தாலும் சொல்லுங்க..."

"தம்பி, நான் எப்படி வாழ்ந்தவள்னு ஒனக்குத் தெரியும். ஒரு விதவைப் பெண்... அதுவும் சொத்துப்பத்தில்லாத ஒருத்தி, கூப்பிட்டால் வந்துடுவான்னு ஒரு நெனப்பு வருது பாருங்க... அதைத்தான் என்னால... தாள முடியல... தம்பி."