பக்கம்:வெளிச்சத்தை நோக்கி.pdf/47

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சு.சமுத்திரம் 45

மெய்யப்பனின் சோகம் கோபமாகியது. அவள் கண் கலங்குவதைப் பார்க்கப் பார்க்க, அவன் கண்கள் சிவந்தன. அவள் தளர்ந்து தளர்ந்து, மேஜையில் சாயப் போகிறவள் போல, மண்ணாய்க் குழைந்தபோது, அவன் நாடி நரம்புகள் உச்சி முதல் உள்ளங்கால் வரை இழுத்துப் பிடித்தன. தலை உயர்ந்ததுபோல் தெரிந்தது. கால்கள் வளர்ந்ததுபோல் தெரிந்தன.

இதற்குள் மானேஜர் உள்ளே இருந்து, "வாணி... கம் குயிக்கிலி..." என்றார். அவளோ, மெய்யப்பனை சோகச் சிரிப்போடு பார்த்தாள். மெய்யப்பன் ஒரு முடிவுக்கு வந்தவன்போல் தலையை ஆட்டிக் கொண்டான். தரையை உதைத்துக் கொண்டான். இன்று நாட்டில் பொருளாதார 'எக்ஸ்பிளாய்டேஷன்' நடப்பதுபோல் அலுவலகங்களிலும், பண்ணை வயல்களிலும் 'செக்ஸ்பிளாய்டேஷன்' நடக்கிறது. இது, முன்னது போனால்தான் போகும் என்றாலும், முன்னதை விட எந்த வகையிலும் கொடுமையில் குறைந்ததில்லை. ஆண் பெண் எதில் சரிநிகர் சமத்துவமாக இருக்கிறார்களோ இல்லையோ, இதில் சம உரிமை பெற்று, சமக்கடமை செய்கிறார்கள். விமலா ஒரு உதாரணம்; இந்த மானேஜர் இன்னொரு உதாரணம்.

மானேஜர் இப்போது காலிங் பெல்லை அடித்துக் கொண்டே "வாணி... வாணி..." என்றார். அவள் அனிச்சையாக நகர்ந்தபோது, ஒருவேளை மெய்யப்பன் இருக்கும் தைரியத்தில் தைரியமாக நடந்தபோது, மெய்யப்பன் அவளிடம் பதில் கேட்க விரும்பாதவன்போல் பேசினான். "அவன் கிடக்கான்... நீங்க நேராய் வீட்டுக்குப் போங்க. நான் அவனை கவனிச்சுக்குறேன்..."

அவள் நம்ப முடியாததுபோல் பார்த்தாள்.

"ஆமாக்கா... நான் சொல்றபடி... போங்க..."