பக்கம்:வெளிச்சத்தை நோக்கி.pdf/48

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

46 வெளிச்சத்தை நோக்கி...

"தம்பீ... நான்... எனக்காக மட்டும் வாழல... இரண்டு பிள்ளைகளுக்காகவும் வாழனும்... நான் அனாதை..."

"நான் அப்பா, அம்மா, அண்ணன், தம்பி இல்லாதவன். நீங்களும்.... அப்படித்தான். அதனால... நாம ரெண்டு பேருந்தான் நிஜமான அக்கா தம்பி. ஒரே பெற்றோருக்கு பிறந்தவங்க உரிமைக்காக அடிச்சுக்குவாங்க... ஆனால் பெற்றோரில்லாத இரண்டு பேர் சந்திக்கும்போது அவங்களோட பாசம், உரிமையில் தேயாமல், கடமையில் மினுங்கும். இந்த வகையில் நான் உங்களோட உடன் பிறவா தம்பி... நீங்க பேசாமப் போங்கக்கா என்னை நீங்க தம்பியாய் ஏத்துக்கிட்டது உண்மைன்னா... உடனே போகணும்."

"நீ சொன்னதே போதும் தம்பி... நீ செய்து காட்டக் கூடியதைத்தான் சொல்கிறவன் என்பதும் எனக்குத் தெரியும். இருந்தாலும், அவன், மேலே இருக்கிறவங்களோட காலை பிடிச்சுக்கிட்டு, கீழே இருக்கிறவங்க தலையில உதைக்கிற டைப்... என் வேலை டெம்பரரி... நல்லவிதமான வாழ்க்கை முறையில இருக்கிற என் பிள்ளிங்களால டெம்பரரியாகூட தெருவுல நிற்க முடியாது..."

"அப்படின்னா... உள்ளே போகப் போறேன்னு சொல்றீங்களா..."

"நீ கூட என்னை புரிஞ்சுக்கலியே... நான் அப்படிச் சொல்லல... அவன்கிட்ட பக்குவமாப் பேசுன்னு சொல்றேன்."

"சரி... அதை என் பொறுப்புல விட்டுடுங்க... ஒங்க வேலைக்கு ஒரு ஆபத்தும் வராது... அப்படியே வந்தாலும், என் அக்காவை எப்படிக் காப்பாத்தணுமுன்னு எனக்குத் தெரியும்."

வாணிக்கும் ஏதோ ஒரு உறுதி வந்தது. அவனைக் கையெடுத்துக் கும்பிட்டபடி, வேகமாக வெளியேறி விட்டாள். காலிங்பெல் தொடர்ந்து அடித்தது. பிறகு அதை அடித்தவரே அங்கே வந்துவிட்டார். கழுத்தைச் சுருக்கிப் பிடித்த டை 'டை' அடித்த தலைமுடி. பழுப்பேறிப்போன