பக்கம்:வெளிச்சத்தை நோக்கி.pdf/49

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சு.சமுத்திரம் 47

முகம். சாம்பல் நிறம். சுமாரான உயரம். ஐம்பது வயதில் அறுபதைத் தாண்டிய தோற்றம் உடைந்துபோன குரலில் மெய்யப்பனை அதட்டுவதுபோல் கேட்டார்.

"நீங்க இன்னும் போகலியா..."

மெய்யப்பன் அவர் முன்னால் வந்து நின்று கொண்டான்... முழங்குவது போல் சொன்னான். "அதைத்தான் நானும் கேட்கணுமுன்னு நினைச்சேன்."

வார்த்தைக்கு வார்த்தை 'ஸார்' போட்டும், சற்று விலகி நின்றும் பேசும் மெய்யப்பன், இப்போது நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு, மதர்ப்போடு நிற்பதைப் பார்த்ததும், மானேஜருக்கு ஆச்சரியமாக இருந்தது. அதைக் காட்டும் வகையில், வாயை லேசாக விரித்தார். சுற்றுமுற்றும் பார்த்தார். வாணியை வேறு காணவில்லை. ஒருவேளை இவன் இருப்பதால் போய் விட்டாள் போலும். ஆத்திரத்தோடு கேட்டார். "வாட் யூ மீன் மிஸ்டர் மெய்யப்பன்."

"ஒண்ணுமில்ல... ஆபீஸ்லேடீஸ் தான் போயிட்டாங்களே... நீங்க.... இன்னும் இருக்கிங்களேன்னு கேட்க வந்தேன்."

மெய்யப்பன் குடித்திருப்பானோ என்று அவருக்குச் சந்தேகம். கோபத்தோடு கேட்டார்: "கடைசியில ஒங்களுக்கும் குடிப்பழக்கம் வந்துட்டா..."

"குடியைக் கெடுக்கிற பழக்கத்தைவிட குடிப்பழக்கம் தேவல..."

"மெய்யப்பன்... ஒங்களுக்கு மூடு சரியில்லன்னு நினைக்கேன்."

"அயோக்கியங்களை மூடுற வரைக்கும் என் மூடு இப்படித்தான் இருக்கும்."

"வாட் யூ மீன்."

"எதுக்கு ஸார் கண்ணாமூச்சுப் பேச்சு...? வாணியக்காவ எதுக்காக சினிமாவுக்குக் கூப்பிட்டிங்க?... உங்க