பக்கம்:வெளிச்சத்தை நோக்கி.pdf/52

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

50 வெளிச்சத்தை நோக்கி...

வருகிறவளை வேறதுக்காகக் கூப்பிடுறது... அதிகார துஷ்பிரயோகம் இல்லையா... அதுவும் உயிருக்கு உயிராய் பழகுன சகாவோட மனைவியைக் கூப்பிடுறதைவிட... நம்ம மனைவியை கூட்டிக் கொடுக்கது எவ்வளவோ மேல் தெரியுமா..."

மானேஜர் விழித்தார். எதையோ தீவிரமாக யோசிப்பவர் போல் தலையை குறுக்கும் நெடுக்குமாக ஆட்டினார். ஏதோ பேசப்போன மெய்யப்பனைப் பார்க்காமலே, கைகளை மட்டும் ஆட்டிக்கொண்டு, "பிளிஸ் மெய்யப்பன், லீவ் மீ அலோன்... பிளிஸ்..." என்று மாறி மாறிச் சொன்னார். மெய்யப்பனுக்குக்கூட, அவர் மீது லேசாகப் பரிதாபம் ஏற்பட்டது. அவரையே சிறிது நேரம் உற்றுப் பார்த்துவிட்டு, "யூ ஆல்சோ லீவ் வாணி அலோன்... இது நமக்குள் நடந்த விவகாரமாய் முடியட்டும்... வாணியக்கா மேலே... ஏதாவது சாக்குப் போக்குல நடவடிக்கை எடுக்க நினைத்தால், நான் ஜெயிலுக்குப் போகவும் தயாராய் இருக்கேன்..."

மெய்யப்பன், நாலடி தள்ளிப்போய் நின்று, மானேஜரையே உற்றுப் பார்த்தான். பிறகு மடமடவென்று நடந்தான்.

மானேஜர், கைகளை முதுகின் பின்புறமாக வளைத்துப் பிடித்துக்கொண்டே, குறுக்கும் நெடுக்குமாக நடந்தார். அவருக்கு எந்த உணர்வு ஏற்பட்டாலும், குற்ற உணர்வு ஏற்படாததுபோல் தோன்றியது. இளமைக் காலத்திலேயே பெண் விவகாரங்களில் சொந்தக் கிராமத்திலும், வேலை பார்த்த சில ஊர்களிலும், செமத்தையாக உதைபட்டிருக்கும் அவருக்கு மெய்யப்பனின் மிரட்டல் அச்சத்தைக் கொடுத்தாலும், அது அதிகமாகவில்லை. எதிரில் உட்காரச் சொன்னால் அல்லாது, உட்காராத-உட்காரக்கூடாத ஒரு கிளார்க், அதுவும் ஒரு பிஞ்சுப் பையன், மிரட்டியதை நினைத்தபோது, அவருக்கு உதைபட்டபோது ஏற்பட்டதை விட, அதிக அவமானம் ஏற்பட்டது. அந்த அவமானத்திற்குக் காரணமான வாணி நினைவுக்கு வந்ததும் ஆத்திரப்